கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு – மகாராஷ்டிரா அரசு உத்தரவு… !!!
இந்தியாவில் தற்போது 236 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்களில் இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.
இதுதொடர்பாக, மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கிறிஸ்துமஸ், புத்தாண்டை வழிபாட்டு தலங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் எளிமையாக கொண்டாட வேண்டும். 24 மற்றும் 25-ம் தேதிகளில் இரவு நடக்கும் பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் 50 சதவீதம் பேர் மட்டும் பங்கு பெறவேண்டும்.
ஆலயங்களுக்கு வெளியில் கடைகள் போடக்கூடாது. அதிக மக்கள் கூடும் வகையில் பேரணி, ஊர்வலங்கள், வாணவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது