கொரோனா சிகிச்சை- பைசர், மெர்க் நிறுவனங்களின் மாத்திரைக்கு அனுமதி வழங்கியது அமெரிக்கா…!!
அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பைசர் நிறுவனம் கொரோனா நோய் தொற்று சிகிச்சைக்கான மாத்திரையை உருவாக்கி உள்ளது. ‘பேக்ஸ்லோவிட்’ என்ற அந்த மாத்திரைக்கு அவசர பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கக் கோரி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் பைசர் நிறுவனம் கடந்த மாதம் விண்ணப்பித்தது.
மாத்திரை தொடர்பான ஆய்வுகளை அமெரிக்க அரசு மேற்கொண்டு வந்தது. இந்தநிலையில் பைசர் நிறுவனத்தின் கொரோனா மாத்திரையை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா மாத்திரை
இதுகுறித்து அமெரிக்க அரசு தரப்பில் கூறும்போது, ‘‘பேக்ஸ்லோவிட் மாத்திரை 12 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கோ அல்லது நோய் அறிகுறி இருப்பவர்களுக்கோ கொடுக்கலாம். இதில் வயதானவர்கள், உடல் பருமன் மற்றும் இதய நோய் உள்ளவர்களும் அடங்கும். மாத்திரையை கொடுப்பதற்கு தகுதியான குழந்தைகள் குறைந்தபட்சம் 40 கிலோ எடை கொண்டவர்களாக இருக்கவேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா மாத்திரை பரிசோதனையின்போது, வைரஸ் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது மற்றும் அதிக ஆபத்து உள்ளவர்களின் இறப்பு வாய்ப்பு 88 சதவீதம் குறைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பைசர் நிறுவனத்தின் அதிகாரி ஆல்பர்ட் பூர்லா கூறும்போது, ‘‘இந்த மாத்திரை உயிர்களை காப்பாற்றவும் ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா நோயாளிகளை குணமடைந்து வெளியேற்றவும் உதவும் ஆற்றல் கொண்டது. கொரோனாவுக்கு எதிரான போரில் வாய்வழி தடுப்பு சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும்’’ என்றார்.
இதேபோல் மெர்க் நிறுவனத்தின் கொரோனா மாத்திரைக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கி உள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு வெளியே எம்எஸ்டி என அழைக்கப்படும் மெர்க் நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த மாத்திரை, 1,400 பேருக்கு வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி தோன்றிய 5 நாட்களுக்குள் வழங்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், அதிக ஆபத்தில் உள்ளவர்களில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும், இறப்புகளையும் 30 சதவீதம் குறைத்திருப்பது தெரியவந்துள்ளது.
பைசர் மாத்திரையை ஒப்பிடும்போது, மெர்க் நிறுவனத்தின் மாத்திரையின் செயல்திறன் மிகவும் குறைவுதான். எனினும், தற்போது ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்த மாத்திரையின் பங்களிப்பு கொரோனா சிகிச்சையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது.