யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் ஏற்பாட்டில் முற்றுகை போராட்டம்!! (படங்கள் வீடியோ)
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை 9.30 மணியளவில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்த படகுகளைப் விடக்கூடாது, எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே போன்ற பல்வேறு கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டது.
போராட்டத்தின் காரணமாக ஏ9 வீதி மற்றும் யாழ் மாவட்ட செயலகம் சில மணிநேரம் முடங்கியிருந்ததுடன் வீதியூடான போக்குவரத்து முடங்கியது.
இதனையடுத்து போராட்ட இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தான் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி தீர்வை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்ததை அடுத்து தாங்கள் போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”