;
Athirady Tamil News

‘எண்ணெய்க்கு தேயிலை’ பண்டமாற்று – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளைத் தீர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்குவதற்காக, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பெருந்தோட்ட அமைச்சுக்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கைத்தொழில், சுரங்கம் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கமும் ஈரான் இஸ்லாமியக் குடியரசும் கடந்த 21 ஆம் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து கைச்சாத்திட்டன.

இலங்கை பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கைத்தொழில், சுரங்க, வர்த்தக பிரதி அமைச்சர் அலிரேசா பேமன்பக் ஆகியோர் அந்தந்த அரசாங்கங்களின் சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

பொருளாதார உறவுகள் துறையில் இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, எண்ணெய்க் கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதன் மூலம் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு சிலோன் தேயிலையின் விற்பனையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, நிறுவனத் தோட்ட சீர்திருத்தங்கள், தேயிலை மற்றும் இறப்பர் தொடர்பான பயிர் அறுவடை மற்றும் தொழிற்சாலைகளை நவீனமயமாக்கல் மற்றும் தேயிலை / இறப்பர் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண, இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டபிள்யூ.டபிள்யூ.டி. சுமித் விஜேசிங்க, இலங்கை தேயிலை சபையின் பணிப்பாளர் நாயகம் அனுர சிறிவர்தன, இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் இலங்கை தேயிலை சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தொழில், சுரங்க, வர்த்தக பிரதி அமைச்சர் அலிரேசா பேமன்பாக் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே ஆகியோருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக மரியாதை நிமித்தம் சந்தித்து, பரஸ்பர நலன்கள் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினர்.

இந்தக் கொண்டாட்டகரமான தருணத்தில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வழி வகுத்த இரு நாடுகளுக்குமிடையேயான நட்புறவு மற்றும் ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் விஸ்வநாத் அபோன்சு, இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே ஆகியோரின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை நினைவு கூர்கின்றோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.