கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரசை காட்டிலும் ஒமைக்ரான் வேகமாக பரவுவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
மேலும் நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களிலும் சுகாதார துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து கேரளாவுக்கு கடந்த 12-ந் தேதி வந்த வாலிபர் ஒருவருக்கு முதலில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகியோருக்கும் தொற்று உறுதி ஆனது.
பாதிப்புக்கு ஆளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்த மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி ஆனது.
ஒமைக்ரான் பாதிப்பு உறுதியான 5 பேரில் 2 பேர் இங்கிலாந்தில் இருந்தும், ஒருவர் அல்பேனியா நாட்டில் இருந்தும் கொச்சி வந்தவர்கள். இன்னொருவர் நைஜீரியா நாட்டில் இருந்தும் கேரளா வந்தவர் ஆவார். மற்றொரு நபர் பெங்களூருவில் இருந்து கோழிக்கோடு வந்தவர் ஆவார்.
இவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 5 பேருக்கும் ஒமைக்ரான் உறுதி ஆனது. இதையடுத்து கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு 29 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவது பற்றி மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்து ஒமைக்ரான் பாதிப்பு உறுதியான நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று கண்டறியபட்டவர்கள் அரசின் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், என்றார்.