லண்டன், பாரிசில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை – நியூயார்க்கில் கடும் கட்டுப்பாடுகள்…!!
தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியா உள்பட 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது. கொரோனாவில் இருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில் தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதனால் பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சீனாவிலும் கட்டுப்பாடுகள் இரட்டிப்பாக்கப்பட் டுள்ளன. அங்குள்ள ஒரு மாகாணத்தில் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் அடுத்த வாரம் புத்தாண்டு கொண்டாட்டம் வர இருக்கிறது. நியூயார்க், பாரிஸ், லண்டன் உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டை பொதுமக்கள் ஆட்டம், பாட்டத்துடன் மிகசிறப்பாக கொண்டாடுவார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் களை இழந்தது.
இதேபோல் இந்த ஆண்டும் பாரிஸ் மற்றும் லண்டனில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க்
58 ஆயிரம் பேர் கூடும் இடத்தில் இந்த ஆண்டு 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை கடைபிடித்து புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பல நாடுகள் புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
இதனால் இந்த ஆண்டும் புத்தாண்டு களை இழக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.