;
Athirady Tamil News

யாழில் சிலை கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது – 15க்கும் மேற்பட்ட சிலைகள் விற்பனை!!

0

யாழில் காணாமல் ஆக்கப்படும் சிலைகளை கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்கள் இருவர் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 09ஆம் திகதி காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை காணாமல் ஆக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பில் , கோவில் நிர்வாகத்தினரால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து சில நாட்களில் தெல்லிப்பளை , பலாலி உள்ளிட்ட வலி வடக்கில் உள்ள நான்கு ஆலயங்களில் பிள்ளையார் சிலை உள்ளிட்ட சிலைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

தொடர்ந்து இந்து ஆலயங்களில் சிலைகள் காணாமல் ஆக்கப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்தமையால் , பொலிசார் விசாரணைகளை தீவிரப்படுத்தினர்..

அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கீரிமலை நல்லிணக்கப்புரத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து கடுமையான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தனர்.

அதன் போது , அவரது கையடக்க தொலைபேசியில் இருந்து , சிலைகள் பலவற்றின் படங்களை மீட்டனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவரது சகோதரனும் சிலை கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என கண்டறிந்து அவரையும் கைது செய்தனர்.

அதேவேளை சந்தேக நபர்களின் வீடுகளில் மேற்கொண்ட தேடுதலில் வீட்டில் இருந்து மூன்று சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் , கொழும்பு ஆமர் வீதி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு ஆலய சிலைகளை படம் எடுத்து அனுப்பி , அவர் எந்த சிலைக்கு என்ன விலை என பேரம் பேசப்பட்ட பின்னர், அந்த சிலைகளை களவாடி , யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்தில் சென்று சிலைகளை குறித்த வர்த்தகரிடம் ஒப்படைத்து பணம் வாங்கி வந்துள்ளனர்.

இவ்வாறாக யாழில் இருந்து சுமார் 15க்கும் மேற்பட்ட சிலைகள் களவாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் . பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.