;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் திருடப்பட்ட 20இற்கு மேற்பட்ட இந்து விக்கிரகங்கள் கொழும்பில் மீட்பு; மேலும் ஒருவர் கைது!! (படங்கள்)

0

காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்பட பல இடங்களில் இந்து ஆலயங்களில் திருடப்பட்ட 20 மேற்பட்ட இந்து விக்கிரகங்கள் கொழும்பு சென்ற பொலிஸ் குழுவினால் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் மற்றும் நவக்கிரி ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் இந்து விக்கிரகங்களை தென்னிலங்கையில் உள்ள வர்த்தகர்களுக்கு விற்பனை செய்ய முகவர்களாக செயற்பட்டுள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்தனர்.

டிசெம்பர் 9ஆம் திகதிக்கும் நேற்று 23ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவரது அலைபேசியில் திருடப்பட்ட இந்து விக்கிரகங்கள் பலவற்றின் ஒளிப்படங்களும் காணப்பட்டன. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நேற்றைய தினம் 2 விக்கிரகங்கள் கைப்பற்றப்பட்டன.

அவை இரண்டும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. சந்தேக நபரும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் கொழும்புக்கு விரைந்த உப பொலிஸ் பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான குழுவினர் அங்கு வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மேலும் 20இற்கு மேற்பட்ட விக்கிரகங்களை மீட்டனர்.

அவற்றை கொள்வனவு செய்த வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவற்றில் பல இராணுவ மற்றும் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களின் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட விக்கிரகங்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படுகின்றன என்று பொலிஸார் கூறினர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.