ட்வின்ஸ்!! (மருத்துவம்)
லேடீஸை எல்லாம் வேலையில பர்மனன்ட் பண்ண மாட்டோம். கல்யாணமானா வேலையைவிட்டுப் போயிடுவீங்க…’’ – பணி நிரந்தரம் பற்றிக் கேட்கும் போதெல்லாம் எனக்கு இதைத்தான் சொல்லி மறுத்தார்கள் என்னுடைய பழைய நிறுவனத்தில். திருமணத்துக்குப் பிறகு வேலையைத் தொடர்ந்த போது கேட்டதற்கு, எதை நம்பி உங்களை பர்மனன்ட் பண்றது? குழந்தை பிறந்தா வேலையை விட்டு நின்னுடுவீங்க…’ என்று புதுக் காரணம் சொன்னார்கள்.
திருமணமும் குழந்தைப் பிறப்பும் ஒரு பெண்ணின் வேலையை எந்த வகையில் பாதிக்கும் எனப் பலமுறைகோபப்பட்டிருக்கிறேன். குழந்தை உண்டானதும், அதிலும் இரட்டையர் என உறுதியானதும் நிர்வாகத்தின் பயமுறுத்தல் என்னைப் பீடித்தது. அன்றே என் அம்மாவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டேன். குழந்தைங்களை நீதான் பார்த்துக்கணும். எனக்கு என் வேலை ரொம்ப முக்கியம்… கம்பெனி யில சொன்னது உண்மையாகிடக்கூடாது. நான் வலி வர்ற வரைக்கும் வேலைக்குப் போவேன்…’’ என்றேன். நாங்க இருக்கோம்…’ என நம்பிக்கை தந்தார்கள் அம்மாவும் அப்பாவும். ஆனால், நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை.
ரெண்டு குழந்தைங்க… ரிஸ்க் அதிகம். 8வது மாசத்துலேருந்து கவனமா இருக்கணும். டிராவல் பண்ணக்கூடாது…’ – கறாராகச் சொன்னார் டாக்டர். 7வது மாத இறுதியிலிருந்தே பிரசவ விடுப்பு. அதை ஈடுகட்ட, பிரசவமாகி, சரியாக 45வது நாள் வேலையில் சேர்ந்தேன். எடைக் குறைவாகப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் அம்மாவின் மடியில் கிடத்திவிட்டு, அவசரமாக வேலைக்கு ஓடி வருவேன். பிஞ்சுகளின் முகம் நினைவுக்கு வந்து, பால்கட்டிய மார்பகங்களைவிட அதிகமாக வலிக்கும்.
மாலையில் எனர்ஜி எல்லாம் வற்றிய நிலையில் எனக்காகக் காத்திருப்பார் அம்மா. அள்ளி அணைக்கப்பட காத்திருப்பார்கள் குழந்தைகள் இருவரும். அதன் பிறகு எனக்கு அடுத்த டியூட்டி ஆரம்பமாகும். ஒவ்வொருவராக பேபி பவுச்சில் கட்டிக்கொண்டு டூவீலரில் வீட்டுக்குப் போய், அதன் பிறகு அவர்களுடன் கொஞ்ச நேரம் கொஞ்சி விளையாடி, வீட்டு வேலைகளை முடிப்பதற்குள் தூக்கம் கெஞ்சும். பிள்ளைகளுக்கோ அது விளையாட்டு நேரம்… விடிய விடிய விழித்துக் கொண்டிருப்பார்கள். மாறி மாறி பசியில் அழுவார்கள். நானும் என் கணவரும் ஆளுக்கொரு குழந்தையை மடியில் போட்டுத் தட்டிக் கொண்டே இருக்கும்போதே விடிந்திருக்கும். மறுநாள் காலையும் அதே ஓட்டம்… அதே பரபரப்பு… அலுவலகத்தில் போய் உட்கார்ந்தால் தூக்கக் கலக்கத்தில் கண்கள் தானாக மூடும்.
குழந்தைகள் பிறந்த முதல் ஒரு வருடம் பைத்தியம் பிடிக்காத குறைதான். இருவரையும் குளிப்பாட்டி, பால் பாட்டில்களை ஸ்டெரிலைஸ் செய்து, துணி, மணிகளை பேக் செய்து ஊருக்குப் புறப்படுகிற எத்தனிப்புகளுடன் தயாராவதற்குள் ஜீவனே வற்றிப் போகும். வேலையின் இடையே போன் செய்தால் ஹலோவை முந்திக் கொண்டு கேட்கும் குழந்தைகளின் அலறலும் அழுகையும். மனம் பதறித் தவிக்கும்.தலையில் செருகுகிற சீப்பை மறந்து அப்படியே வண்டி ஓட்டிக்கொண்டு போனது, குப்பைத்தொட்டியில் போட வேண்டிய குப்பைப்பையை அலுவலகம் வரை கொண்டு சென்றது என இந்தக் களேபரத்தில் அடிக்கடி சில காமெடிகளும் அரங்கேறியதுண்டு.
இதையெல்லாம் மீறி இந்த வேலை தேவைதானா என்கிற கேள்வியும் நான் சரியான அம்மா இல்லையோ?’ என்கிற குற்ற உணர்வும் தினம் தினம் மனதைக் குடைந்தது உண்டு. வருடங்கள் கடந்து இப்போது யோசித்துப் பார்த்தால், `சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறேன்’ என்றே தோன்றுகிறது. குழந்தை வளர்ப்புக்கும் வேலைக்குமான போராட்டத்தை நான் சரியாகவே சமாளித்திருக்கிறேன் என்பதில் எனக்குத் திருப்தியே!
இரட்டையரைப் பெற்றெடுத்த ஒவ்வொரு பெண்ணும் `சூப்பர் மாம்’ என்று போற்றப்பட வேண்டியவர்கள்…’’ – எனக்கும் சேர்த்துப் பட்டம் கொடுத்தபடி சூப்பராக ஆரம்பிக்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ். அதுலயும் இரட்டையரைப் பெற்றெடுத்த பிறகு வேலையைத் தொடரும் பெண்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். சாதாரணமாகவே பிரசவத்துக்குப் பிறகு வேலையைத் தொடர்வதில் தடுமாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களுக்கு அந்த சவால்களும் சிக்கல்களும் ரொம்பவே அதிகம் இருக்கும். இரண்டு குழந்தைகள் என உறுதியானதுமே வேலையைத் தக்க வைத்துக்கொள்ள நினைப்போர் அதற்கான திட்டமிடலில் இறங்க வேண்டும்.
மேலதிகாரியுடன் பேசி, வேலை நேரத்தை சற்றே வசதியாக மாற்றிக் கொள்ளலாம். வீட்டிலிருந்து முடித்துக் கொடுக்க முடிகிற வேலைகளை அப்படியும் செய்து கொடுக்கலாம். உங்கள் திறமையின் மீது நம்பிக்கை உள்ள மேலதிகாரி, நிச்சயம் இந்த டீலுக்கு சம்மதிப்பார்.
இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள உறவினர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். முன்கூட்டியே இரண்டு பேரை அதற்குத் தயாராக்குவது அவசியம். உறவினரை அழைக்க முடியாதவர்கள், வேலைக்கு ஆட்களை நியமித்துப் பார்த்துக் கொள்ளலாம். வேலையில் சேர்வதற்கு முன்பே ஆட்களை நியமித்து அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது சிறந்தது.
பிறந்த வீடு, புகுந்த வீடு என இரண்டு பக்க உறவுகளும் இருப்போர், இரு இடத்திலும் ஒவ்வொரு குழந்தையை விட்டுச் செல்லலாம். இன்று ஒரு குழந்தை, நாளை இன்னொரு குழந்தை என மாற்றி மாற்றி விட்டுச் சென்றால் இரண்டு இடங்களும் இரண்டு குழந்தைகளுக்கும் பழகும். `குழந்தைகளைப் பிரிப்பதா?’ என்கிற குற்ற உணர்வெல்லாம் தேவையில்லை. ‘வேலையும் வேண்டும், குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என நினைப்பவர்கள், இந்தத் தியாகத்துக்குத் தயாராகத்தான் வேண்டும்.
வேலைக்கு வைத்தவர்களோ, உறவினர்களோ… யாராக இருந்தாலும் நீங்கள் வேலையில் இருந்து திரும்பியதும் முதல் வேலையாக குழந்தைகளை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு, விட்டால் போதும் என கிளம்பவே நினைப்பார்கள். அது உங்களுக்கு டென்ஷனை ஏற்றும். அதனால், வீட்டுக்கு வந்ததும் சமையல் உள்ளிட்ட மற்ற வேலைகளை வைத்துக் கொள்ளாமல், எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டு தயார் நிலையில் வைத்துவிட்டுச் செல்வது கொஞ்சம் டென்ஷன் குறைக்கும்.
கணவரின் வேலை நேரத்தை மாற்றிக் கொள்ள முடியும் என்றால் அவருடன் கலந்து பேசி, நீங்கள் இல்லாத நேரத்தைக் குழந்தைகளுடன் செலவழிக்கும்படி கேட்டுக் கொள்ளலாம். இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பதில் கணவரின் பங்கு மிக மிக அவசியமானது. கணவரின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்ற பெண்கள் கடினமான இந்தப் பயணத்தை சுலபமாகக் கடந்து விடுவதாகச் சொல்கிறார்கள்.
குழந்தைகளுடன் நீங்கள் செலவிடுகிற நேரம் குறித்த குற்ற உணர்வைத் தவிர்க்கவும். அவர்களுடன் நீங்கள் எத்தனை மணி நேரத்தைச் செலவிடுகிறீர்கள் என்பதைவிட, அந்த நேரம் எத்தகையது என்பதே முக்கியம். வேலை முடிந்து திரும்பியதும், குழந்தைகள் தூங்கச் செல்கிற வரையிலான நேரத்தை அவர்களுக்கு மட்டுமே ஒதுக்குங்கள்.
உங்களுடைய வேலை நேரத்தை வரையறுத்துக் கொள்ளுங்கள். தினமும் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே வேலை பார்ப்பது, வார இறுதி நாட்களை குழந்தைகளுக்காக மட்டுமே ஒதுக்குவது என சில கொள்கைகளை வைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக ஒரு விஷயம்… வேலை, குழந்தைகள் என இரண்டு விஷயங்களுக்கு இடையில் உங்களைக் கவனித்துக் கொள்ளத் தவறாதீர்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் இந்த இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எப்போதும் கவனம் செலுத்துங்கள்.
பிரேமாவின் டிப்ஸ்
கடவுள் உங்களை நம்பிக் கொடுக்கிற பொறுப்பு ட்வின்ஸ். அதை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது உங்கக் கடமை. உடம்புல என்ன பிரச்னைன்னாலும் டாக்டர் பார்த்துப்பாங்க. ஆனா, மனசை ஆரோக்கியமா வச்சுக்க உங்களால மட்டும்தான் முடியும். பாசிட்டிவ் மனப்பான்மை இருந்தா எப்படிப்பட்ட கஷ்டத்தையும் ஜெயிச்சிடலாம். நல்லதே நடக்கும்னு நம்பினா நிச்சயம் நடக்கும். ஏன்னா, மனசு அவ்வளவு பவர்ஃபுல்!
அன்பு… அன்யோன்யம்… ஆச்சரியம்!
லேட்டாக கிடைத்தாலும் லேட்டஸ்ட்டாக கிடைத்ததில் டபுள் மகிழ்ச்சி பிரேமாவுக்கு. திருமணமாகி 10 வருட எதிர்பார்ப்புக்குப் பிறகு கிடைத்த இரட்டை வரம், இவரது வாழ்க்கையை நாளுக்கு நாள் அழகாக்கிக் கொண்டிருக்கிறது. க்ரிஷ், க்ரிஷா என இவருக்கு ஒரு குட்டி இளவரசனும் ஒரு குட்டி இளவரசியும் இருக்கிறார்கள்.
`
கல்யாணமான முதல் மூணு வருஷங்கள் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. அப்புறம் குழந்தைக்கான ஆசை ஆரம்பமானது. நிறைய நிறைய டாக்டர்ஸ்… நிறைய நிறைய ட்ரீட்மென்ட்ஸ்… மாசத்துல பாதி நாள் ஆஸ்பத்திரியிலயே போகும். கிட்டத்தட்ட 6 வருஷங்கள் இப்படியே வீணாப் போச்சு. எந்தக் கோயிலையும் எந்தப் பிரார்த்தனையையும் விட்டு வைக்கலை. ஐ.வி.எஃப் ட்ரீட்மென்ட் வரைக்கும் வந்தாச்சு. ரெண்டு முறை ஐ.வி.எஃப். பண்ணி தோல்வி. இப்படியே பத்து வருஷங்கள் ஓடிப் போயிருந்தது…’’ – கண்ணீருடன் கடந்த காலம் பகிர்கிற பிரேமாவின் வார்த்தைகள், குழந்தையில்லாத பெண்களின் வலிகளின் பிரதிபலிப்பு.
கடைசியா ஒரு முறை ட்ரை பண்ணிப் பார்ப்போம்… இந்த முறையும் சக்சஸ் ஆகலைனா குழந்தை ஆசைக்கு முற்றுப்புள்ளி வச்சிடுவோம்கிற மனநிலையிலதான் மூணாவது முறை ட்ரீட்மென்ட்டுக்கு போனேன். கடவுள் புண்ணியத்துல சக்சஸ் ஆச்சு. கர்ப்பமாகி ரெண்டாவது மாசம் ட்வின்ஸ்னு சொன்னாங்க. அப்ப எனக்கு 33 வயசு. இனிமே குழந்தையே பிறக்காதுங்கிற நிலைமையில விரக்தியோட ட்ரீட்மென்ட் எடுத்த நேரத்துல ஒண்ணுக்கு ரெண்டு குழந்தைங்கனு தெரிஞ்சப்ப நான் எப்படிப் பூரிச்சுப் போயிருப்பேன்?
அன்னிலேருந்து முழுக்க முழுக்க பெட் ரெஸ்ட். 9 மாசமும் வீட்டை விட்டு வாசலைக்கூட தாண்டலை. தினமும் இன்ஜெக்ஷன்… உடம்பு சரியில்லாம ரெஸ்ட் எடுக்கிறதை விட, ஒரு பிரச்னையுமே இல்லாம 24 மணி நேரமும் ரெஸ்ட் எடுக்கிறதுங்கிறது ரொம்பவே கொடுமையான விஷயம். இந்தக் குழந்தைங்களை நல்லபடியா பெத்தெடுக்கணும்கிற நினைப்பு மட்டும்தான் இருந்தது. வீடு கொள்ளாம சொந்த பந்தங்கள் இருந்து என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க. பாட்டு கேட்பேன். விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பேன். 9 மாசமும் அதுதான் என் உலகம்.
ரிஸ்க் இருக்கிறதால நார்மல் டெலிவரிக்கு வெயிட் பண்ண வேண்டாம்னு சிசேரியன்ல குழந்தைங்களை எடுத்தாங்க. ட்வின்ஸ்னு சொன்னபோது நான் என்ன குழந்தைங்கனு கேட்கலை. எனக்கு ரெண்டும் பொண்ணா இருக்கணும் இல்லைனா ஒரு பொண்ணு, ஒரு பையனா இருக்கணும்னு ஆசை இருந்தது. முதல் குழந்தையை வெளியில எடுத்ததும் பொண்ணுனு சொன்னாங்க. அப்பவே அடுத்து என்ன குழந்தையா இருந்தாலும் ஓ.கே.னு நினைச்சுக்கிட்டேன்.
முதல் பத்து மாசம் சேலத்துல அம்மா வீட்ல இருந்தேன். ரெண்டு பேரும் வெயிட் கம்மியா பிறந்திருந்ததால ரொம்ப கவனமா பார்த்துக்க வேண்டியிருந்தது. உதவிக்கு நிறைய பேர் இருந்தாலுமே முதல் ஒரு வருஷம் தூக்கமில்லாத பொழுதுகளைத் தவிர்க்க முடியலை. இப்ப அவங்களுக்கு 6 வயசாகுது. ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்காங்க. ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸா இருக்காங்க. விளையாடறாங்க.
பகிர்ந்துக்கிற மனப்பான்மையும் விட்டுக் கொடுக்கிற மனசும் இருக்கு. குழந்தை வேணும்கிற என்னோட பிரார்த்தனைக்கு கடவுள் செய்திருக்கிறது ரொம்பப் பெரிசு. இன்னொரு குழந்தையை நினைச்சுப் பார்க்க முடியாத எனக்கு ஒரே டைம்ல ரெண்டு பேரையும் கொடுத்து, அவங்களுக்குள்ள நானே ஆச்சரியப்படற அளவுக்கு அன்பையும் அன்யோன்யத்தையும் கொடுத்திருக்கிற கடவுளோட கருணையை என்னனு சொல்றது…’’ – மீண்டும் வழிகிற கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறார் பிரேமா. இது சந்தோஷக் கண்ணீர்!