ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!!
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. லேசான உடல் நல பாதிப்பையே ஒமைக்ரான் ஏற்படுத்தி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளது ஆறுதல் அளித்தாலும், அதன் பரவும் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம். அம்மாநிலத்தை சேர்ந்த 108 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 21 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 11 பேர் ஜெயப்பூரை சேர்ந்தவர்கள். 6 பேர் அஜ்மீரிலும், மூன்று பேர் உதய்பூரிலும் வசிக்கின்றனர். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 5 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். மேலும் 3 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.