தெற்காசிய நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் முதல் நாடு…!!
உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி உள்ளன.
தெற்காசிய நாடுகளில் ஒன்றாக திகழும் பூடானில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் தடம் பதிக்கவில்லை. இருந்தாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நாடு பூஸ்டர் தடுப்பூசியை அறிமுகப்படுத்தி உள்ளது.
பூடானில் ஏற்கனவே 93 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த பூடான் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த வார இறுதியில் 2 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தெற்காசிய நாடுகளில் முதல் நாடாக பூஸ்டர் தடுப்பூசியை பூடான் அரசு அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பூடானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,659 ஆக உள்ளது. இதில் 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.