மலேசியா கனமழை – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு…!!
பருவநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளில் மழைப்பொழிவு காலம்தவறி வழக்கத்தை விட அதிக அளவில் மழை கொட்டுகிறது. இதன் விளைவாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கனமழையால் அந்த நாடு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் அளவுக்கு அதிகமாக கனமழை பெய்து வருகிறது. பெனிசுலா மலேசியா மாகாணத்தின் பஹங், சிலங்கர் ஆகிய 2 நகரங்கள் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் இருந்த 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மலேசியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.