சீனாவில் அதிகரிக்கும் கொரோனா – குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கலா?…!!
சீன தலைநகர் பீஜிங்கில் பிப்ரவரி 4 முதல் 20-ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அங்கு கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 48 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் 158 பேர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 76 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் தற்போது திடீரென அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.