சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி – இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையரகம் அனுமதி…!!!
கொரோனாவை தொடர்ந்து தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் தகுதியானவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவி ஷில்ட் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஜனவரி 3ம் தேதி முதல் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
முன்னதாக ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த சிறுவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையரக நிபுணர்கள் 10 வாரங்கள் ஆய்வு செய்தனர். அந்த மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சிறுவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையரக ஜெனரல் வழங்கியுள்ளார்.
சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மருத்துவ அறிவியல் நிபுணர்களின் கருத்துக்களை அறிய மத்திய சுகாதாரத்துறை காத்திருந்த நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையராக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும், பயனாளிகளின் வயதை மேலும் குறைப்பது குறித்து நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கருத்துக்களை அறிய நாங்கள் காத்திருப்போம் என்று மத்திய சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.