கர்நாடகாவில் 28ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு…!!
கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் டிசம்பர் 28ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
வரும் 28ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை 144 விதியின் கீழ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா அமைச்சரவை ஆலோசனை
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழுவினர் பங்கேற்றதாக அமைச்சர் சுதாகர் குறிப்பிட்டார்.
144 தடை உத்தரவு போடப்படுவதால் புத்தாண்டு கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஹோட்டல்கள், உணவகங்களில் 50 சதவீத இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் சுதாகர் குறிப்பிட்டுள்ளார்.