ட்வின்ஸ்!! (மருத்துவம்)
ரெண்டு பேரையும் எந்த வித்தியாசமும் இல்லாம ஒண்ணாத்தானே வளர்க்கறோம்… அவங்களுக்கு கல்யாணம் பண்ணும்போது என்ன முடிவெடுக்கிறது? ஒருத்தனுக்கு முந்தியும், இன்னொருத்தனுக்கு பிந்தியும் பண்ணினா மனசு கேட்குமா? ஒரு வார்த்தை கூடுதலாகக் கொஞ்சினால்கூட, `உனக்கு அவன்தானே ஒசத்தி… அப்புறம் ஏன் என்னைப் பெத்தே… அவனை மட்டும் பெத்திருக்க வேண்டியதுதானே’ எனக் கேட்கிறவர்கள் கல்யாண வயது வந்தால் பக்குவமாகி விடுவார்களா? பிரச்னை பண்ணுவார்களா? அடிக்கடி இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமான கற்பனைகள் தோன்றும் எனக்கு.
அதெல்லாம் அவங்க கவலை… எப்போ கல்யாணம் பண்ணணும்… யாரைப் பண்ணணும்கிறதை எல்லாம் அவங்களே முடிவு பண்ணிப்பாங்க… கவலைப்பட வேற விஷயம் இருந்தா யோசி…’ என மற்றவர்கள் என்னைக் கிண்டலடித்தாலும், என்னைப் போலவே இரட்டையரைப் பெற்ற பெரும்பாலான அம்மாக்களுக்கும் இந்தக் கவலை இருப்பதைக் கேட்டு அறிந்திருக்கிறேன்.
சமீபத்தில் கேரளாவில் நடந்த இரட்டையர் திருமணக் காட்சிகள் என்னை இன்னும் வெகுவாக யோசிக்க வைத்துவிட்டன. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள செயின்ட் சேவியர் சர்ச்சில் நடந்த அந்தத் திருமணம், ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ரீமா, ரீனா என இரட்டைச் சகோதரிகள்… தில்ராஜ், தில்கர் என இரட்டைச் சகோதரர்களை ஒரே நாள், ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்த பாதிரியார்கள்கூட ரெஜி, ரோஜி என்கிற இரட்டையர்கள். மட்டுமா? மணமகன்களுக்குத் துணையாக வரும் பேஜ் பாய்ஸும் இரட்டையர்கள்.
மணமகள்களுடன் வரும் ஃபிளவர் கேர்ள்ஸும் இரட்டையரே. திருமணத்துக்கு வருகை தந்தவர்களிலும் பெரும்பாலானவர்கள் இரட்டையர்களாம். அத்தனை இரட்டையர்களும் ஒரே நிறத்தில் ஒரே மாதிரியான அலங்காரங்களுடன் வந்திருந்து, அனைவரையும் குழப்பத்தின் உச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள்! அடடா… கேட்கவே எக்கச்சக்க சுவாரஸ்யமாக இருக்கும் இந்தத் திருமணம் அருகில் இருந்து பார்த்தவர்களை எப்படிப் பரவசப்படுத்தியிருக்கும்?
இரட்டையர் திருமணம் குறித்த கேள்விகள் அனேகப் பெற்றோருக்கு இருக்கும். பிறந்தது முதல் இருவருக்கும் இடையில் எந்த வேற்றுமையும் பாராட்டாமல் வளர்த்தவர்களுக்கு திருமண வயது நிறைய குழப்பங்களைத் தரும். இருவரில் யாருக்கு முதலில் திருமணம் முடிப்பது? ஒரே நேரத்திலா? ஒரே மேடையிலா? இரட்டையரான இவர்களுக்கு இரட்டையரையே திருமணம் செய்து வைப்பது சரியானதாக இருக்குமா? இப்படி ஏராளமான கேள்விகள்…இப்படி எல்லா குழப்பங்களுக்கும் விளக்கங்கள் தருகிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.
ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர் (ஐடேன்ட்டிகல் ட்வின்ஸ்) அதே போன்ற இன்னொரு ஐடேன்ட்டிகல் ட்வின்ஸை மணப்பதென்பது மிக மிக அபூர்வமானதும் சுவாரஸ்யமானதுமான சம்பவம். இத்தகைய திருமணங்களில் த்ரில் அதிகமாக இருந்தாலும் நடைமுறையில் சமாளிப்பது சிரமம். எல்லா ஒத்த இரட்டையர்களுக்கும் அது சாத்தியப்படுவதும் இல்லை.
ஒத்த இரட்டையர் ஒத்த இரட்டையரை மணம் முடிப்பது அவர்கள் நான்கு பேர் வாழ்க்கையிலும் ஒருவித சலிப்பையே தரும். இரட்டையர் இரட்டையரையே திருமணம் செய்வதன் மூலம் அவர்களது உலகம் சுருங்குகிறது. உலகம் மிகப் பரந்தது. அதை நாமாக சுருக்கிக் கொள்வது தேவையற்றது. இந்த நான்கு பேருக்குள்ளும் ஒருவித பலமும், உதவும் குணமும் இருக்கும் என்றாலும், ஒரே மாதிரியான தன்மைகளின் காரணமாக வாழ்க்கை சவால்களோ, சுவாரஸ்யங்களோ இல்லாமல் போய்விடும். காலப்போக்கில் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு குறைந்து, மனம் சிதறவும் வாய்ப்புகள் உண்டு.
பொதுவாகவே வாழ்க்கையில் தேடல் அதிகரிக்கிற போதுதான் அதில் சுவாரஸ்யம் கூடும். இத்தகைய இரட்டையர் திருமணங்களில் ஒருவித பிடிமானமின்மை தோன்றும். சோர்வு உண்டாகும். ஒரு ஜோடி இரட்டையருக்கு வருகிற மனக்குழப்பமும் சலிப்பும், மிகச் சுலபமாக இன்னொரு ஜோடியையும் பற்றிக் கொள்ளும். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கையும் ஒரே மாதிரி அமையும்.
வேறுபாடுகள் அதிகரிக்கும் போதுதான், அது மரபியல் ரீதியாக ஒருவரை மேம்படுத்தும். நல்லவிதமான வளர்ச்சிக்கும் வழியாக அமையும். தன்னை மேம்படுத்திக் கொள்வதைத்தான் ஜீன் களும் முயற்சி செய்யும். அது இப்படிப்பட்ட ஒத்த இரட்டையர் திருமணங்களில் நிகழாமல் போகலாம். இவற்றை எல்லாம் மீறி, நாங்கள் எங்கள் இரட்டையருக்கு இன்னொரு இரட்டையரைத்தான் திருமணம் செய்வோம் எனப் பிடிவாதமாக இருக்கும் பெற்றோரும் உண்டு.
பொதுவாக இரட்டையர் என்பவர்கள் இரண்டு தனித்தனி மனிதர்கள் என்பதை பிறந்தது முதல் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். இருவரையும் அவரவர் விருப்பு, வெறுப்புகளுக்கு மதிப்பளித்து, அவரவர் தனித்தன்மைகளைப் பார்த்தே வளர்க்க வேண்டும். தோற்றத்தில் ஒன்று போல இருந்தாலும் இருவரும் தனித்தனி நபர்களாகவே இருப்பார்கள். அப்படி இருப்பதைத்தான் அவர்களும் விரும்புவார்கள்.
திருமண விஷயத்திலும் இப்படித்தான். பெரும்பாலான பெற்றோர் இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்வதை விரும்புவதில்லை. இரட்டையரைப் பெற்றவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் வரன் தேட ஆரம்பிக்க வேண்டும். அந்தத் தேடலும் அவர்களது தனிப்பட்ட விருப்பங்கள், தகுதிகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றுக்கேற்பவே இருக்க வேண்டும். இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ காதல் வரலாம். அது நியாயமானதாக இருக்கும்பட்சத்தில் பெற்றோர் அதை அனுமதித்து ஏற்பதே சரி.
ஒருவருக்கு காதல் திருமணமும், இன்னொருவருக்கு தாங்கள் பார்த்துச் செய்கிற திருமணமும் சரிப்பட்டு வருமா என்கிற குழப்பம் தேவையில்லை. யாருக்கு முதலில் வரன் அமைகிறதோ அவருக்கு முதலில் திருமணம் முடிக்கலாம்.இன்னொருவருக்கு அடுத்த 3 முதல் 6 மாதங்களுக்குள் முடித்துவிடுவது சிறந்தது. அதற்கு மேல் காலம் கடத்த வேண்டாம். அது அவர்களிடையே ஒருவகையான மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். மிகப்பெரிய வித்தியாசங்கள் இல்லாமல், பெரும்பாலும் எல்லா விஷயங்களிலும் சம அந்தஸ்தில் உள்ளவர்களாகப் பார்த்து மணம் முடிப்பதும் அவசியம்…’’
இசை போல என்றும் இணைந்திருக்கணும்!
ஆரத்தியும் அர்ச்சனாவும் அச்சில் வார்க்கப்பட்ட மாதிரி ஒன்று போல இருக்கிறார்கள். கர்நாடக இசைத் துறையில் முன்னேறிக் கொண்டிருக்கிற இளம் பாடகிகள். ஐந்து நிமிட இடைவெளியில் யாரிடம் பேசினோம் என தலைசுற்றுகிறது. நடை, உடை, பாவனைகள் மட்டுமின்றி, குரல்கூட இருவருக்கும் ஒரே மாதிரி இருக்கிறது.
ஸ்கூல், காலேஜ்ல நிறைய பேரைக் குழப்பியிருக்கோம். இப்போ கல்யாணமான பிறகும்கூட எங்களைப் பார்க்கிற புகுந்தவீட்டு மனுஷங்க லேசா குழம்பித்தான் போவாங்க…’’ – குறும்புச் சிரிப்புடன் ஆரம்பித்து வைக்கிறார்கள் அர்ச்சனாவும், ஆரத்தியும். மகள்களைப் பெற்ற மகராசியாக தன் அனுபவம் பற்றித் தொடர்கிறார் அம்மா பாரதி லட்சுமி நாராயணன்.
எனக்கு முதல்ல ஒரு பையன். அவன் பிறந்து ஆறரை வருஷங்களுக்குப் பிறகு பிறந்தவங்க அர்ச்சனாவும் ஆரத்தியும். அஞ்சாவது மாச ஸ்கேன்ல ட்வின்ஸ்னு சொன்னாங்க. அப்போ நாங்க உத்தரப்பிரதேசம், பரேலியில இருந்தோம். எனக்கு பிறந்த வீடு, புகுந்த வீடுனு ரெண்டு பக்கமும் ஹெல்ப்புக்கு ஆளில்லை. மூணு பேரையும் எப்படி வளர்க்கப் போறோம்கிற பயமும், திகிலும், கவலையும்தான் பெரிசா இருந்தது. தவிர ரெண்டும் பெண் குழந்தைங்களா இருந்தா நல்லாருக்கும்னு தோணினது. நாங்க குடியிருந்த இடத்துலேருந்து, ஹாஸ்பிட்டலுக்கு வரணும்னா 37 கிலோமீட்டர் பயணம் பண்ணணும்.
அது ரிஸ்க்குனு டாக்டர் சொன்னதால, 7வது மாசமே செகந்திராபாத்ல எங்கம்மா வீட்டுக்கு வந்துட்டேன். 9 மாசம் முடிஞ்சதும் சுகப்பிரசவத்துல ரெண்டு பேரும் பிறந்தாங்க. முதல் ஒரு வருஷத்தைத் தாண்டறது ரொம்பவே கஷ்டமா இருந்தது. அர்ச்சனாவுக்கும் ஆரத்திக்கும் ஸ்கூல் போகிற வயசு வந்ததும், அவங்களைச் சேர்த்த அதே ஸ்கூல்லயே நானும் டீச்சர் வேலைக்கு சேர்ந்துட்டேன். ஒண்ணா ஸ்கூலுக்கு போயிட்டு ஒண்ணா வீட்டுக்கு வருவோம். என் பையன் பாடுவான்.
அவனை பாட்டு கிளாஸ்ல கொண்டு விடும் போது அர்ச்சனா, ஆரத்தியை கிளாஸ்ல கொஞ்ச நேரம் உட்கார வச்சுட்டு, நான் பக்கத்துல உள்ள மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கப் போயிட்டு வருவேன். என் பையன் பாடறதைக் கேட்டு, இவங்க ரெண்டு பேரும் பாட ஆரம்பிச்சாங்க. அப்போ அவங்களுக்கு 3 வயசு. வீட்டுக்கும், பாட்டு கிளாஸுக்கும் ரொம்ப தூரம்கிறதால என்னால தினமும் போக முடியலை. என் பையனை அம்மா வீட்ல விட்டுட்டேன். 15 நாளைக்கொரு முறை மார்க்கெட் போற போது, ரெண்டு பேரையும் சும்மா பாட்டு கிளாஸ்ல உட்கார வச்சிட்டுப் போவேன்.
ஸ்கூல்ல கிளாஸ் முடிஞ்சதும் இவங்களுக்காக ஸ்பெஷலா பாட்டு கத்துக் கொடுத்தாங்க சாரதா டீச்சர். அப்புறம் சென்னை வந்தோம். பி.எஸ்.நாராயணசாமி கிட்ட பாட்டு கத்துக்கிட்டாங்க. ரெண்டு பேரும் இன்ஜினியரிங் முடிச்சாங்க. இப்போ ஆர்.வேதவள்ளிகிட்ட பாட்டு கத்துக்கிறாங்க. அர்ச்சனா, ஆரத்தியை பொறுத்தவரைக்கும் நாங்க அவங்களை ட்வின்ஸா நினைச்சு வளர்க்கலை. ரெண்டு பேரும் தனித்தனி மனுஷிகள்னுதான் நடத்தினோம். பல விஷயங்கள்ல அவங்க ரெண்டு பேரோட விருப்பங்களும் வேற வேறயா தான் இருந்திருக்கு. இசையைத் தவிர… ரெண்டு பேரையும் இணைச்சு வச்சிருக்கிற மேஜிக்கும் அந்த மியூசிக்தான். 7 வயசுல முதல் மேடைக் கச்சேரி பண்ணினாங்க. இன்னிக்கு வரைக்கும் அந்த ஒற்றுமை தொடர்ந்திட்டிருக்கு.
கல்யாணம் பண்ற வயசு வந்ததும், ரெண்டு பேருக்கும் சென்னை மாப்பிள்ளைகளா பார்க்கணும்னு தெளிவா இருந்தோம். ரெண்டு பேரோட பாட்டுக்கும் எந்தத் தடையும் வந்துடக்கூடாதுனு நினைச்சோம். முதல்ல ஆரத்திக்குதான் வரன் அமைஞ்சது. அப்புறம் 2 வருஷம் கழிச்சுதான் அர்ச்சனாவுக்கு கல்யாணம் பண்ணினோம். ஆரத்தியோட கணவர் சிவசுப்ரமணியமும், அர்ச்சனாவோட கணவர் சித்தார்த் வெங்கட்ராமனும், இன்னும் அவங்களோட பெற்றோர்களும் ரெண்டு பேரோட இசை ஆர்வத்துக்கு ரொம்பவே ஊக்கமா இருக்காங்க. ரெண்டு பேரும் வாழ்க்கையிலயும் அவங்க தேர்ந்தெடுத்த இசையிலயும் இதே மாதிரி என்னிக்கும் இணைஞ்சிருக்கணும்கிறதுதான் என் ஆசை… பிரார்த்தனை எல்லாம்.’’
பாரதியின் டிப்ஸ்
இரட்டைக் குழந்தைகளை வளர்க்கிறதுக்கு தனி திறமையும் பொறுமையும் அவசியம். அது ரொம்ப ரொம்பக் கஷ்டமான ஒரு பொறுப்பு. ஆனாலும், அசாத்தியமான மன உறுதியையும் சரியான திட்டமிடலையும் வளர்த்துக்கிட்டாங்கன்னா ட்வின்ஸையும் நல்லபடியா வளர்த்துடலாம்.’’