புதிய ரசீது கொள்கை வழக்கு – கூகுள் நிறுவனம் ரிட் மனு தாக்கல்…!!!
பிளே ஸ்டோர் மூலம் செயலிகள் மற்றும் சேவைகளை விற்பதற்கு, செயலி வடிவமைப்பாளர்கள் கூகுள் நிறுனத்தின் உள்ளமைந்த கட்டண முறைகளை பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் புதிய ரசீது கொள்கையை இந்த ஆண்டு அறிவித்தது.
இதற்கு பேடிஎம், ரேசார் பே, மேட்ரிமோனி டாட் காம் உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து புதிய ரசீது கொள்கையை அமல்படுத்துவதற்கான தேதியை அடுத்த ஆண்டு மார்ச் மாதமாக நீட்டித்தது.
இதையடுத்து கூகுளின் பிளே ஸ்டோர் ரசீது கொள்கையில் இருந்து இடைக்கால நிவாரணம் கோரி, 422 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தொழிற்முறை கூட்டமைப்பான டிஜிட்டல் இந்தியா அறக்கட்டளை கூட்டமைப்பு (ஏடிஐஎஃப்), கடந்த அக்டோபர் மாதம் இந்திய போட்டி ஆணையத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த இந்திய போட்டி ஆணையம், கூகுள் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு கூகுள் இதுவரை தனது பதிலைத் தாக்கல் செய்யாத நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க கூடுதல் அவகாசம் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
கோப்பு புகைப்படம்
இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூகுள் நிறுவனம் கூறியிருப்பதாவது:-
இந்திய போட்டி ஆணைய விவகாரத்தில் கால அவகாசம் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த விசாரணை செயல்முறையை நாங்கள் மதிக்கிறோம். நியாயமான விசாரணைக்கான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவோம்.
வழக்கை விசாரிக்கும் இந்திய போட்டி ஆணையத்தின் குழுவில் நீதிபதி ஒருவரை சேர்க்க வேண்டும். மேலும் புகார்தாரர்களின் அடையாளத்தையும் வெளிப்படுத்த வேண்டும். புகார்தாரர்களின் அடையாளத்தை அறிந்துகொள்வது அவர்களின் குறைகளைப் புரிந்துகொள்ளவும், தீர்க்கவும் எங்களுக்கு உதவும் .
இவ்வாறு கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.