ஜப்பான் தூதுவர் வழங்கியுள்ள வாக்குறுதி !!
ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் இலங்கையர்களுக்கு முன்னுரிமையில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.
கண்டியில் உள்ள புனித தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “ஜப்பானுக்கும் இலங்கைக்கும் நீண்ட நட்பு வரலாறு உண்டு. இலங்கைக்கு ஜப்பான் எப்போதும் ஆதரவளித்து வருகிறது.
அடுத்த வருடம் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு வருகின்றது. அதனைக் கொண்டாடுவதற்காக கண்டிக்கு வந்து தலாதா மாளிகையில் வழிபட்டேன்.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறேன். இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்கவும் நாங்கள் நம்புகிறோம்.
அதிகளவான ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைத்து, இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
தற்போது இலங்கையில் ஜப்பானால் செயல்படுத்தப்பட்டு வரும் ஜப்பானிய திட்டங்களைத் தொடரவும் எதிர்பார்க்கிறோம். ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஊடாக இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க எதிர்பார்ப்பார்க்கின்றோம்” என்றார்.