உயர் தரத்திலான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும்!!
அடிப்படை வசதிகளை மேம்படுத்தி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஈடுபடும் போது நாட்டினதும், பொது மக்களினதும் நலனுக்காக உயர் தரத்திலான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நாட்டில் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையில் புதிய மாற்றத்திற்கு வழிவகுத்துள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஜிட்டல் மயப்படுத்தல் நிகழ்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் தொழில்நுட்பம் மிக உயர்தரத்தை கொண்டிருந்த போதிலும் ஒழுக்க விழுமியங்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதகமான வகையில் ஊடகங்கள் செயற்படுமாயின், இதனால் எந்த பயனும் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று (28) இதுதொடர்பாக நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நற்பண்புகளை மதிக்கும் பண்பாடுகளை கொண்ட புதிய தயாரிப்புக்களுக்காக ஊடகங்கள் பயன்படவேண்டும். இது ஊடகங்களுக்குள்ள பொறுப்பாகும். சிரமமான சந்தர்ப்பங்களில் இருந்து விடுபட மேற்கொள்ள வேண்டிய தேசிய பொறுப்பாக இது கொள்ளப்பட வேண்டும் என்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகபெரும மேலும் தெரிவித்தார்.