கிளிநொச்சியில் உழவர் சந்தையை அமைக்க நடவடிக்கை!!
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கு அமைய உழவர் சந்தையை ஆரம்பிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்டாவளை மற்றும் பரந்தன் கமநல சேவைகள் திணைக்களங்களை இரண்டாகப் பிரித்து வினைத்திறனான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, இரணைமடு கமக்காரர் அமைப்பின் சம்மேளனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் நேற்று (28) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே இவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது காணிப் பதிவுகளை ஒழுங்குபடுத்தி பூரணப்படுத்தல், காணி அபிவிருத்தி சபைகளை வினைத்திறனாக இயங்க வைத்தல், கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை, நீர் வழங்கல் செயற்பாடு உட்பட பல்வேறு விடயங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எடுத்துரைக்கப்பட்டது.
அமைச்சர் சம்மந்தப்பட் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து ஒவ்வொரு விடயங்களையும் விரிவாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
விவசாயிகள் தமது உற்பத்திகளை நியாயமான முறையில் விற்பனை செய்து உயர்ந்தபட்சமான நன்மைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், உழவர் சந்தை ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான வளாகத்தின் ஒரு பகுதியில் உழவர் சந்தையை தற்காலிகமாக ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதியை சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிப் பெற்றுக் கொடுத்தார்.
நெத்தலியாறு தொடக்கம் ஆனையிறவு வரையான சுமார் 16 கிலோ மீற்றர் நீளமான கண்டாவளை உவர் நீரேரிக்கு அணை கட்டப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டத்திற்கு மின்சாரத்தினை பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.