விபத்துக்களில் 1.3 மில்லியன் மக்கள் வருடாந்தம் வைத்தியசாலைக்கு…!!
முதுகுத்தண்டு விபத்துக்களில் சிக்கியவர்கள் கொவிட் 19 நோயினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
´விபத்துகள் அற்ற பாதுகாப்பான ஆண்டு´ எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர் சமித்த சிறிதுங்க, நாட்டில் விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் சுமார் 1.3 மில்லியன் மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த நாட்டில் பதிவாகும் பெரும்பாலான விபத்துக்கள் வீடுகள் சார்ந்தவையாகும்..
இவற்றில் விழுதல், விலங்குகள் கடித்தல், மின்சாரம் தாக்குதல், தீக்காயங்கள், பாம்பு தீண்டுதல், விஷம் அருந்துதல் மற்றும் நீரில் மூழ்குதல் ஆகியவை அடங்கும்.
தங்கி சிகிச்சை பெறும் ஐந்து பேரில் ஒருவர் தீடீர் விபத்துக்களில் சிக்கியவர் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.