இந்திய விமானங்களில் இந்திய இசையை ஒலிக்க வேண்டும் – மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கடிதம்…!!
இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்திய இசையை ஒலிக்க செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என கடந்த 23-ம் தேதி இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமானங்களிலும், விமான நிலைய வளாகங்களிலும் இந்திய இசையை ஒலிக்கச் செய்வது குறித்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க நிறுவனங்களின் விமானத்தில் அந்த நாட்டின் இசையான ஜாஸ் இசை ஒலிக்கப்படுகிறது. ஆஸ்திரியா விமானத்தில் மொஸாா்ட் இசை ஒலிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள் இயக்கும் விமானத்தில் அரபு இசை ஒலிக்கப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் தனியார், அரசு இயக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் இரண்டிலும் எப்போதாவதுதான் இந்திய இசை ஒலிக்கப்படுகிறது. இதை மாற்றி இந்திய விமானங்களில் இந்திய இசையை ஒலிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இந்திய இசைக்கு என்று ஆழமான பாரம்பரியம் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் இந்திய இசை குறித்து பெருமைக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.