;
Athirady Tamil News

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஒன்று கூட மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது – மத்திய அரசு…!!

0

ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக்கூடிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 15 சதவீத இடங்களும், முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு வழங்கப்படும் இடங்களில், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்தபிறகு மீதமாக இருக்கும் இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே திருப்பி வழங்கப்படும்.

தமிழகத்தை பொருத்தவரை இளநிலை படிப்பில் 450 இடங்களும், முதுநிலைப்படிப்பில் 9075 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் கலந்தாய்வுக்கு பின் இளநிலை மருத்துவ படிப்பில் 200 முதல் 300 இடங்கள் தமிழகத்திற்கே மீண்டும் கிடைத்து வந்தது. அந்த இடங்களில் தமிழக மாணவர்களை சேர்த்துக்கொள்ளக்கூடிய நடவடிக்கை இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் புதிய மாணவர் சேர்க்கை நடைமுறைகளை அமல்படுத்தப்போவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன்படி, மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஒன்று கூட மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது. வழக்கமாக ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் மாணவர் சேர்க்கை, இந்த ஆண்டு 4 முறை நடத்தப்படும். கடைசி இடங்கள் நிரம்பும் வரை கலந்தாய்வு நடைபெறும். ஒரு இடம் கூட மாநிலங்களுக்கு திருப்பி தர மாட்டாது என தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவால் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு கிடைத்து வந்த கணிசமான இடங்கள் இந்த ஆண்டு கிடைக்காது என்பதால் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.