ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது செருப்புகளை வீசிய குற்றவாளி -குஜராத் கோர்ட்டில் பரபரப்பு…!!!
குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த ஏப்ரல் மாதம், புலம்பெயர்ந்த தொழிலாளியின் 5 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சூரத் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
விசாரணையில், தனியாக இருந்த சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறிய அந்த வாலிபர், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கழுத்தை நெரித்து கொலை செய்தது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசு தரப்பின் 26 சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் 53 ஆதாரங்களின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பைக் கேட்டு ஆத்திரமடைந்த குற்றவாளி, தனது செருப்புகளை கழற்றி, நீதிபதியை நோக்கி வீசினார். ஆனால் அந்த செருப்புகள் நீதிபதி மீது விழவில்லை. சாட்சி கூண்டின் அருகே விழுந்தன. இந்த சம்பவத்தால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளியை போலீசார் பிடித்து சிறைக்கு அழைத்துச் சென்றனர்.