எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்குள் தமது சம்பள அதிகரிப்பு இல்லாவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை!! (வீடியோ)
எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்குள் தமது சம்பள அதிகரிப்பு இல்லாவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே தீபன் திலீசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நீண்டகால பிரச்சினையாக காணப்பட்ட சம்பள முரண்பாட்டை தீர்ப்பதாக அரசு கூறியுள்ளது. ஆனால், இன்று வரை சம்பள முரண்பாட்டை பகுதியாக தீர்ப்போம் என கூறிய அரசு, இன்னமும் அது தொடர்பாக வர்த்தமானியை வெளியிடவில்லை.
அரசு கூறியது போன்று ஜனவரி மாதம் 20ஆம் திகதி மூன்றில் ஒரு பங்கு சம்பள முரண்பாடு தீர்க்கப்பட வேண்டுமானால், ஜனவரி 5ஆம் திகதி அதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட வேண்டும். இன்று வரை குறித்த செயற்பாடு நடைபெறவில்லை.
கடந்த 24 வருடங்களாக நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இம்மமுறை அரசு தாம் வழங்கிய வாக்குறுதியை சம்பள அதிகரிப்பில் காட்டவில்லை என்றால் நாம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
அரசு தற்போது தேவையில்லாமல் சொந்த ஆடம்பரத்துக்காக செலவழித்து வருகிறது.பொருளாதார கொள்கை இல்லாமல் தான் நாட்டு இப்போது பாதாளத்தை நோக்கி செல்கிறது. அதேவேளை படித்தவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தாமல், இராணுவத்தை அரச நிர்வாக கட்டமைப்பில் கொண்டு வந்துள்ளமையால் நாடு இராணுவ ஆட்சிக்குள் சென்றுள்ளது.
தங்களுடைய விடயங்களை மூடி மறைப்பதற்காக, மக்களை துன்பத்தில் தள்ளியுள்ளனர். மாதம் 35 ஆயிரத்தை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்ய முடியும். ஆனால், அரசும் அரசு சார்ந்தவர்களும் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”