புத்தாண்டு கொண்டாட்டம்- அதிக போதையுடன் தள்ளாடினால் வீட்டில் கொண்டு சேர்க்க நடவடிக்கை…!!
அசாமில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு நடவடிக்கைகளை அசாம் அரசு எடுத்துள்ளது.
இது தொடர்பாக அசாம் முதல்- மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தன்று அசாம் மாநிலம் முழுவதும் ஏராளமான விபத்துக்கள் பதிவாகிறது. பலர் உயிரிழக்கிறார்கள். பெரும் பாலான விபத்துக்களுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே காரணம்.
இன்று இரவு மாநிலம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடங்க காவல் துறைக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன்.
யாராவது குடிபோதையில் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் அவரை தடுத்து நிறுத்த வேண்டும். புத்தாண்டு அன்று டிரைவர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பொதுமக்கள் விருந்துகளை ஏற்பாடு செய்து புத்தாண்டை கொண்டாவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மதுபோதையில் டிரைவர் அனுமதிக்கப்பட மாட்டார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியவருடன் வேறு யாராவது ஒருவர் இருந்தால் இருவரும் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அவர்கள் இன்று இரவு அரசாங்க விருந்தினராக இருப்பார்கள். அவர்களை சிறையில் அடைக்கமாட்டோம். இரவு முழுவதும் எங்கள் விருந்தினர்களாக இருப்பார்கள்.
புத்தாண்டு தினத்தன்று மது அருந்தி விட்டு யாரும் வாகனம் ஓட்ட வேண்டாம். டிரைவர் குடிபோதையில் இருக்கும் பட்சத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு போதையில் தள்ளாடுபவர்களை வீட்டில் கொண்டு போய் விடவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
இதற்காக 2 ஹெல்ப் லைன் எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 98546 84760 மற்றும் 99547 58961 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால் அவர்களை வீட்டுக்கு போய் விடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.