தேடுதல் வேட்டையின்போது தலிபான்கள் பதிலடி… 4 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு…!!
பாகிஸ்தானில் உள்ள தலிபான் இயக்கமான தெஹ்ரீக்-இ-தலிபான் இயக்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையே நவம்பர் மாதம் சண்டை நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இதனால் வன்முறைகள், உயிரிழப்புகள் இன்றி அமைதி திரும்பத் தொடங்கியது. ஆனால், இது நீடிக்கவில்லை. சண்டை நிறுத்த உடன்படிக்கையின் விதிமுறைகளை அரசாங்கம் மீறிவிட்டதாக கூறிய தலிபான் இயக்கம், உடன்படிக்கையை இந்த மாத துவக்கத்தில் திரும்ப பெற்றது. அத்துடன் அரசுப் படைகள் மீதான தாக்குதலையும் தொடங்கியது. இதனால், தலிபான்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், வடக்கு வசிரிஸ்தான் மாகாணம், மீர் அலி நகரில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 4 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர்.
ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டு அவனிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ராணுவம் கூறி உள்ளது.