குஜராத், மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் வைரஸ்…!!
கடந்த மாதம் 24ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.
தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா , ராஜஸ்தான், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதனால் வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270-ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இன்று மேலும் 16 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக அகமதாபாத் நகரில் 39 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 59 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குஜராத் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 454 ஆக அதிகரித்துள்ளது.