ஒமைக்ரான் உச்சம் தொட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு உத்தரவு திடீர் ரத்து…!!
கொரோனாவின் பிடியில் சிக்கிய நாடுகளில் ஒன்று தென் ஆப்பிரிக்கா. அங்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஊரடங்கு போடப்பட்டது. அந்த நாடு 4 அலைகளை ஒன்றன்பின் ஒன்றாக சந்தித்தது.
கடந்த மாதம் 24-ந் தேதி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானும் அங்குதான் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இன்றைக்கு உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உச்சம் தொட்டது. கடந்த மாதம் 16-ந் தேதி ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு பாதித்ததே உச்சமாக கூறப்படுகிறது. டிசம்பர் 21-ந் தேதி இது 15 ஆயிரத்து 424 ஆக சரிந்தது. அதிலிருந்து ஒமைக்ரான் பாதிப்பு தொடர்ந்து இறங்கு முகமானது.
இந்தநிலையில் அந்த நாட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பபட்ட ஊரடங்கு உத்தரவு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தேசிய கொரோனா வைரஸ் கட்டளை கவுன்சில் மற்றும் அதிபரின் ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டங்களைத் தொடர்ந்து, ஊரடங்கை நீக்கும் உத்தரவை அதிபர் பிறப்பித்துள்ளார்.
இதையொட்டி பிறப்பித்த உத்தரவில் அதிபர், ஊரடங்கு சட்டம் நீக்கப்படும். எனவே மக்கள் நடமாடும் நேரத்துக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது என கூறப்பட்டுள்ளது.
பொது நிகழ்வுகளில் பங்கேற்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்ளரங்குகளில் 1,000 பேரும், திறந்தவெளிகளில் 2 ஆயிரம் பேரும் கூடலாம். இந்த உத்தரவை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
இரவு 11 மணிக்கு மேலும் மது பானங்கள் பரிமாறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதை ஓட்டல் துறையினர் மகிழ்வுடன் வரவேற்றுள்ளனர். அடுத்த 15 நாளில் பள்ளிக்கூடங்கள் திறக்க உள்ள நிலையில், பெற்றோர் இந்த ஊரடங்கு ரத்து உத்தரவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.