பஸ் விபத்தில் 22 பயணிகள் பலி- டிரைவருக்கு 190 ஆண்டுகள் ஜெயில்…!!
மத்தியபிரதேச மாநிலம் மதலா மலைப்பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 65 பயணிகள் பயணம் செய்தனர். இதில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவார்கள்.
பஸ்சை சம்சுதீன் (வயது 47) என்பவர் ஓட்டிச் சென்றார். அவர் பஸ்சை தாறுமாறாக ஓட்டினார். இதை பார்த்த பயணிகள் மெதுவாக செல்லும்படி கூறினார்கள். ஆனாலும் டிரைவர் அதை கேட்கவில்லை.
அப்போது திடீரென அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் இல்லாத கால்வாய்க்குள் கவிழ்ந்து தீப்பிடித்தது.
இதனால் பயணிகள் அவசர வழியாக வெளியேற முயன்றனர். ஆனால் அந்த கதவில் இரும்பு கம்பி பொருத்தப்பட்டு இருந்ததால் திறக்க முடியவில்லை. இந்த விபத்தில் தீயில் கருகி 22 பயணிகள் பலியானார்கள். ஏராளமானோர் தீக்காயம் அடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மத்தியபிரதேச மாநில கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பஸ்சை தாறுமாறாக ஓட்டிச் சென்று 22 பேர் பலி வாங்கியதால் டிரைவர் சம்சுதீனுக்கு 190 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் பஸ் உரிமையாளர் ஜிதேந்திர பாண்டேவுக்கு 19 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.