வவுனியா விபத்தில் மரணித்த இளைஞனுக்கு அரசியல் தலையீடின்றி நீதி கிடைக்க நடவடிக்கை: பொலிசாரிடம் வலியுறுத்திய திலீபன் எம்.பி!!
வவுனியா விபத்தில் மரணித்த இளைஞனுக்கு அரசியல் தலையீடின்றி நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிசாரிடம் வலியுறுத்தியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
விபத்து விசாரணை தொடர்பில் பொலிசாருடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பிக்கப் வாகனம் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் எமது மாவட்டதைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்தினையடுத்து அப் பகுதியில் மரணித்த இளைஞனின் உறவினர்கள், நண்பர்கள் போராட்டம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது பொலிசார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் அவ்விடத்திற்கு வருகை தந்து நிலமையை கட்டுப்படுத்த முயன்ற போது பதற்ற நிலை ஏற்பட்டது.
இது தொடர்பில் எனது கவனத்திறகு வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை சீர்செய்திருந்ததுடன், பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு நீதி கிடைக்கும் என உறுதி மொழியையும் அவரது குடும்பத்தினரிடம் வழங்கி இருந்தேன். இது தொடர்பில் நான் வவுனியா பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற அடிப்படையில் வலியுறுத்தியுள்ளேன். விபத்துக்குள்ளான பிக்கப் வாகனம் அரசியல் வாதி ஒருவருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றிற்கு உரியது என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்திருந்தனர். இதனால், எந்தவித அரசியல் தலையீடும் இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க பொலிசார் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என நான் வலியுறுத்தியுள்ளேன்.
அத்துடன், வவுனியா தாண்டிக்குளம், இராணுவ உணவகத்திற்கும், சாந்தசோலைப் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏ9 வீதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதுடன், அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றது. இதனால் அப்பகுதியில் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் வீதிக் குறியீடுகள், வேகக்கட்டுப்பாடுகள் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதுடன், பொலிசாரையும் கடமையில் ஈடுபடுத்துமாறும் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன். விரைவில் அந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”