வவுனியா வைத்தியசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பலரும் பாராட்டு!! (படங்கள்)
வவுனியா வைத்தியசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலே பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், புதிய ஒழுங்கமைக்கப்பட்ட முகாமைத்துவ செயற்பாடு காரணமாக நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் அசௌகரியங்கள் இன்றி தங்களிற்கான மருத்துவ தேவைகளை விரைவாக பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக உள்ளது.
குறிப்பாக வவுனியா வைத்தியசாலையில் காணப்படும் 15 நோயாளர் விடுதிகளில் இதுவரை காலமும் காணப்பட்ட கட்டில்கள் மாற்றப்பட்டு நவீன தரத்திலான கட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதன் தொடர் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் தனியார் வைத்தியசாலையினை போன்ற நவீன மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் நோயாளர்கள் தங்களிற்குரிய மருத்துவ உதவிகள் என்பவற்றை மிக விரைவாக பெறுவதற்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டுள்ளது.
வைத்தியசாலை முகப்பு வாயிலின் ஊடாக அவசர சிகிச்சைக்காக, நோயாளர்கள் மற்றும் அம்புலன்ஸ் மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலை பணியாளர்கள், வைத்தியர்கள், வைத்திய நிபுணர்களிற்கு அவசர சிகிச்சை பிரிவு அமைந்துள்ளமைக்கு அருகில் உள்ள வாயிலினை பயன்படுத்துவதற்கு ஏற்ற ஒழுங்கு முறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் முன்னபே வந்து ஓய்வு எடுத்து சீரான முறையில் செல்வதற்கான ஒழுங்கமைப்புக்களும் நிறுவப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கம் மற்றும் பொது அமைப்புக்கள், தன்னார்வலர்களின் நிதி உதவிகளுடன் இவ் அபிவிருத்திகளை முன்னெடுப்பதுடன், விரைவில் பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.
தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 800க்கு மேற்பட்டவர்கள் பணிபுரிவதுடன் இங்கே 15 நோயாளர் விடுதிகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா வைத்தியசாலை தொடர்பாக நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளி கருத்து தெரிவிக்கையில்,
நான் கடந்த மூன்று நாட்களிற்கு முன்னர் கால் வருத்தம் தொடர்பாக வைத்தியசாலைக்கு வந்து நோயாளர் விடுதியில் தற்போது உள்ளேன்.
நான் வரும் போதே மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்கிறேன் என யோசித்து கொண்டே இங்கு வந்தேன். ஆனால் இங்கு வந்த போது முன்பிருந்தது போல் இவ் வைத்தியசாலை காணப்படவில்லை.
ஏனெனில் முன்பு இங்கு வரும் போது எமது நோய்க்கு மருந்து எடுப்பதற்கு பல மணி நேரம் செல்லும் ஆனால் அது தற்போது இல்லை, அத்துடன் முன்பு நோயாளர் விடுதியில் இருக்க வேண்டும் என்றதுமே எனக்கு நோய் இன்னும் கூடுவது போன்ற உணர்வு இருப்பதுடன் அங்கிருந்து எப்போது வீடு போவேன் என்றே யோசித்து கொண்டு இருப்பேன்.
ஆனால் தற்போது இங்கிருந்து வீட்டிற்கு போக போவதை எண்ணி கவலையாக இருக்கின்றது. ஏனெனில் இங்கு காணப்படும் வசதிகள், சுத்தம் மற்றும் மருத்துவ உதவிகளினால் இங்கிருந்து செல்லவே மனம் இல்லை என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”