;
Athirady Tamil News

தொழிலாளர்கள் விடயத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளோம்!!

0

சுபீட்சத்தை நோக்கி எனும் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய அரச தனியார் துறையில் கடமையாற்றுபவர்களின் தொழில் பாதுகாப்பை ஏற்படுத்தல் நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கின்ற தொழில் புரிகின்ற தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தி பல விடயங்களை தொழில் அமைச்சு என்ற வகையில் 2021 ஆம் ஆண்டு பல முன்னேற்பாடுகளை தான் மேற்கொண்டுள்ளதாகவும் அவற்றின் சிறந்த பலன்களை தற்பொழுதும் தொழிலாளர்கள் அனுபவித்து வருவதாகவும் இது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாக அமைந்துள்ளது எனவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் தொழில் அமைச்சு மேற்கொண்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துகின்ற பொழுதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தேசிய ரீதியில் ஆகக் குறைந்த சம்பளமாக இருந்த 10,000 ரூபாவை 12,500 ரூபாய் வரை அதிகரித்துள்ளமை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆக்க குறைந்த சம்பளமாக நாட் சம்பளம் 1,000 ரூபாவாக அதிகரித்துள்ளமை, தனியார் துறையினரின் ஓய்வு காலத்தை 60 வயது வரை அதிகரித்துள்ளமை, தொழிலை நிறைவு செய்கின்ற பொழுது வழங்கப்படுகின்ற 12 இலட்சத்தை 25 இலட்சம் வரை அதிகரித்துள்ளமை, தொழில் செய்கின்ற பொழுது ஏற்படுகின்ற விபத்துக்களின் பொழுது அல்லது அனர்த்தங்களின் பொழுது வழங்கப்படுகின்ற தொகையான 5 இலட்சத்தை 20 இலட்சம் வரை அதிகரித்துள்ளமை போன்ற விடயங்களை கடந்த வருடத்தில் பெற்றுக் கொடுத்தமை பாரிய ஒரு வெற்றியாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தலை முற்றாக நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவும் அதன் இலக்கை நோக்கி பயணிக்கும் முகமாகவும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு ஆகக் குறைந்த வயதாக குறிப்பிடப்பட்டிருந்த 14 வயதை தற்பொழுது 16 வரை அதிகரித்துள்ளமை, 18 வயதிற்கு குறைந்தவர்களை அபாயகரமான 71 தொழில்களில் இருந்து விடுவிப்பது தொடர்பாகவும் அவர்களை அந்த தொழிலில் ஈடுபடுத்துவது சட்டவிரோத குற்றம் என்பதையும் அறிவித்துள்ளோம். இதனை சர்வதேச ரீதியாக தொழில் ஸ்தாபனங்கள் வரவேற்றுள்ளன.

தொழிலாளர்களின் தொழில் பிணக்கு தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்த்து வைப்பதற்கும் அதற்கென மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களையும் தொழிலாளர் தீர்ப்பாயங்கள் ஊடாக அவர்களுக்கான நீதிமன்ற அதிகாரங்களை பெற்றுக் கொடுத்தல் தொழிலாளர்களின் நட்டஈடுகளை விரைவாக பெற்றுக் கொள்வதற்காக தொழில் நட்டஈட்டு ஆணையாளர் நியமித்தல் தொழில் தீர்ப்பாயங்களை ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் தொழிலாளர்களுக்கு கிடைத்த மாபெரும் சலுகைகளாகும்.

அத்துடன் தொழிலாளர் தீர்ப்பாயங்களில் தொழில் வழங்குநர்களும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் தொழில் தீர்ப்பாயங்களில் வழங்கப்படுகின்ற தீர்ப்புகளை சரியான முறையில் நடைமுறைபடுத்துவதற்கு அதற்கான அதிகாரங்களை பெற்றுக் கொடுத்துள்ளதுடன் அதனை கடந்த வருடம் முதல் நடைமுறைபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில் இடைநிறுத்தம் ஒழுக்காற்று நடவடிக்கை என்பன தொடர்பாக ஏற்படுகின்ற பிணக்குகளை 3 மாதத்திற்குள் தீர்த்து வைப்பதற்கு தேவையான சட்டங்களை அறிமுகப்படுத்தல் தொழில் புரிகின்ற தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற முக்கிய விடயங்களாக கருத முடியும் என்பதை தொழிற்சங்கங்களும் ஏற்றுக் கொண்டுள்ளமை அதற்கு கிடைத்த வெற்றியாகும்.

கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு தொழிலாளர்களையும் தொழில் வழங்குநர்களையும் பாதுகாத்து கொள்ளும் முகமாக நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் முன் கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்ற கொவிட் தொற்று தொடர்பாக கூட்டங்கிளில் கலந்துரையாடியமை அது தொடர்பாக தேசிய தொழில் சட்ட வல்லுனர்கள் ஆலோசகர்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டு முன் கொண்டு சென்றமை எனது தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச மட்டத்தில் தொழிலாளர் ஸ்தானத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொழில் புரிகின்ற இடத்தில் ஏற்படுகின்ற வன்முறைகளை தடுப்பது தொடர்பான சி 190 தீர்மானம் மற்றும் வீடுகளில் தொழில் புரிகின்ற தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக சி 189 என்ற தீர்மானத்தை இலங்கையில் பலம்மிக்க ஒரு விடயமாக மாற்றி அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளமை நாம் பெற்றுக் கொண்ட இன்னும் ஒரு வெற்றியாகும்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையில் இருந்து செல்கின்ற தொழிலாளர்களுக்கும் தனியார துறையை சார்ந்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக எங்களுடைய அமைச்சு நேரடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டமை ஒரு முக்கிய விடயமாகும்.

ஓய்வூதியம் இல்லாத தொழிலாளர்கள் அவர்களை வயது முதிர்ந்த காலத்தில் பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையில் அவர்களுக்கான பாதுகாப்பை எவ்வாறு பெற்றுக் கொடுப்பது என்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அதற்காக ஒரு வேலைத்திட்டத்தை 2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்தில் நிறைவு செய்வதற்கான வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றமை ஒரு முக்கிய ஏற்பாடாக கூற முடியும்.

இதற்காக தொழில் ஆணையாளர் தலைமையில் தொழிற்சங்கங்கள் தொழில் தருநர்கள் சிரேஸ்ட உதவி செயலாளர் அடங்களாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது பல முறை ஒன்று கூடியுள்ளதுடன் அவர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றிய பின்பு அதனை சர்வதேச தொழில் சம்மேளனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு அதனை மிகவும் வலுவான முறையில் நடைமுறைபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த வருடம் தொழிலாளர்கள் சார்பாக பல முக்கிய விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமை எங்களுடைய அமைச்சிற்கு கிடைத்த வெற்றியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.