ஆட்சி மாற்றமே இன்றைய நிலைமைக்கு ஒரே தீர்வு!!
தற்பொழுது ஆட்சி நடத்தும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் அதிகாரிகளையும் அமைச்சரவையையும் மாற்றம் செய்வதால் நாட்டில் எந்தவித மாற்றமோ ஏற்படபோவதில்லை. இந்த நாட்டின் மக்களை பட்டனி பஞ்சத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமானால், ஆட்சி நடாத்தும் அரசாங்கத்தின் ஆட்சி தலைமை பீடத்தில் மாற்றம் ஏற்பட்டு ஆட்சி மாற்றம் வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மலையக மக்கள் முன்னனியின் செயலாளர் நாயகம் பேராதெனிய பல்கலை கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான விஜயசந்திரன், மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர். இராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் சுப்பிரமணியம் மலையக தொழிலார் முன்னணியின் நிதிச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உட்பட நுவரெலியா, கந்தப்பளை, உடபுசல்லாவ, நானுஓயா போன்ற இடங்களில் உள்ள தோட்ட தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
மலையக மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் தோட்ட கமிட்டி தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் நுவரெலியா மாநகர சபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (02) இடம்பெற்றது.
இதன்போது மேலும் தனது உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் தமிழ் கட்சிகளும்இதமிழ் பேசும் அனைத்து கட்சிகளும் சிங்கள மக்களுடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்வதற்கு தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதில் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த கட்சியாக மலையக மக்கள் முன்னணியும் இணைந்துள்ளது.
இன்று ஒருநாடு ஒரு சட்டம் என்று இலங்கையில் தற்போது வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கபபட்டாலும் இது சாத்தியமற்றது. காரணம் பௌத்த நாடு என்று இருக்கும் போது நாட்டில் மூவின சமூகம் சார்ந்த மக்கள் என்ற வகையில் அவரவர் மதங்களுக்கு தனி தனி சம்பிர்தாய முறைப்படி சட்டங்கள் உள்ளது.
மதங்கள் சார்ந்த சம்பிரதாயங்கள் மதங்களை சார்ந்தவர்கள் மத அடிப்படையில் சொல்லப்பட்டவாரே செய்து முடிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் ஒரு நாடு ஒரு சட்டம் என சொல்லுதல் சாத்தியமற்றது. உதாரணமாக இந்து சமய மக்களும் பௌத்த சமய மக்களும் உயிரிழந்தவர்களை தீயில் எரிப்பார்கள். இதேவேளை இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் புதைப்பார்கள். ஆனால் இந்த நாட்டில் இறந்தவர்களை எரிப்பதற்கு எரிவாயு இல்லை. புதைப்பதற்கு நிலமும் இல்லை.
இன்று பால்மா இல்லை சீனி இல்லை எரிவாயு இல்லை, அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை, மாவு, அரிசி, பருப்பு என பொருட்களுக்கு தட்டுப்பாடுடன் விலையும் எகிறியுள்ளது. இந்த நிலையில் முதலில் மக்களுக்கு தாராளமாக அத்தியாவசிய பொருட்களை வழங்க சொல்வோம். இன்று தோட்டங்களில் சங்கங்களுக்கு தொழிலாளர்கள் சந்தா செலுத்த முடியாதுள்ளது. இதனால் தொழிலாளர்களின் பிரச்சினைகளை பேச முடியாதுள்ளது.
தோட்ட நிர்வாகங்கள் தொழிற்சக்கங் களை இல்லாதாக்கும் திட்டங்களை செய்து வருகின்றனர். இதற்கு பதிலடி வழங்க வேண்டும். தொழிலாளர்கள் பிணக்குகளை தீர்க்க சந்தா அறவிடப் படாததால் தொழிற்சங்க காரியாலயங் களையும் கொண்டு செல்ல முடியா துள்ளது. அதற்கு மாற்றீடாக அறிவு சார்ந்த தோட்ட கமிட்டிகள் ஊடாக சங்க அங்கத்தவர்களிடம் மாத சந்தாவை அறவிட்டு அதை தொழிற்சங்க தலைமை காரியாலயத்தில் செலுத்த மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதை இம்மாதம் பத்தாம் திகதி நடைமுறைப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் சந்தா தொகை தீர்மானிக்கப்பட்டு தோட்ட கமிட்டிகளுக்கு அறிவிக்கப்படும். அத்துடன் சந்தா பணத்தை தோட்ட கமிட்டிகள் சேகரித்து தொழிற்சக்க காரியாலயத்தில் செலுத்த தோட்ட கமிட்டிகளுக்கு ஒரு தொகை பணம் சம்பளமாகவும் வழங்கப்படுமெனவும் சுட்டிக்காட்டினார்.
தொழிற்சங்கங்களை முடமாக்கினால் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடமாக்கலாம் என்ற திட்டத்தை தோட்ட நிர்வாகம் கையாண்டு வருகின்றனர். ஆயிரம் ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ள போதிலும் தொழிலாளர்களுக்கு இது கிடைக்கவில்லை.
மாறாக இந்த சம்பளத்தை தம்மால் வழங்க முடியாது என நீதிமன்றத்தை நாடியுள்ள தோட்ட கம்பணிகள் வழக்கு முடியும் வரை தொழிலாளர்களின் பிரச்சினைகளை தொழிற்சங்கங்கள் தோட்ட நிர்வாகத்துடன் அனுக கூடாது என்பதற்காக சந்தா அறவிடுவதை நிறுத்தி காய் நகர்த்துகின்றனர் எனவும் தெரிவித்தார்.