மருத்துவ கழிவுகளை எரியூட்டி நிர்வாகிக்கு 70ஆயிரம் தண்டம் விதித்த யாழ்.நீதிமன்று!! (படங்கள்)
யாழ்.பல்கலை கழகத்திற்கு அருகில் உள்ள காணிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய சாலை உரிமையாளருக்கு 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ். நீதிமன்று 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் வித்தித்துள்ளது.
தண்டப்பணத்தை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத்தண்டனை என மன்று தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி, பரமேஸ்வராச் சந்திக்கு அருகில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று, மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை , யாழ்.பல்கலை கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள தமக்கு சொந்தமான காணியில் கொட்டி , எரியூட்டிய நிலையில் அயலவர்களால் , மாநகர சபை உறுப்பினர்களுக்கு , அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு மாநகர சபை உறுப்பினர்கள் , சுகாதார பிரிவினர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வைத்திய சாலை உரிமையாளருக்கு எதிராக, யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியினால், யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந் நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ,
1.பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் தொற்றுநோயை பரப்பும் வகையில் நோயாளிக்கு பாவித்த மருந்து போத்தல்களை வீசியமை
2.தொற்றுநோயை பரப்பும் வகையில் நோயாளிகளினது Toilet pampers வீசியமை
3.தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த ஊசிகளை வீசியமை
4. தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த சேலைன் போத்தல்களை வீசியமை
5. தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த இரத்த பரிசோதனை குப்பிகளை வீசியமை
6.சந்திர சிகிச்சைக் கையுறை மற்றும் அங்கிகளை வீசியமை
7. தொற்று நோயை பரப்பும் வகையில் றெஜிபோம் மற்றும் படுக்கை மெத்தைகளை வீசியமை
ஆகிய 7 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
அனைத்து குற்றச்சாட்டுக்களையும் வைத்தியசாலை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதனை அடுத்து, உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , ஒவ்வொரு குற்றத்திற்கு தலா 10ஆயிரம் ரூபாய் வீதம் 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை விதித்தது.
தண்டப்பணத்தை கட்டத்தவறின் ஒரு மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”