சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நியம விதிகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்த பணிப்புரை – வடமாகாண ஆளுநர்!!
வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நியம விதிகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடமாகாண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை விசேட வேலைத்திட்டமாக கருதுவதற்கு பொலிஸ் மற்றும் பிரதேச சபையின் உதவியை ஆளுநர் கோரியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக காரைநகர் பிரதேசத்தில் மிகச் சிறந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதுகாப்புத் திட்டங்களும், வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் வடிகால் அமைப்புகளும், நெடுஞ்சாலைகளும் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்து தற்போது செயலிழந்து காணப்படுகின்றது.
எனவே, வடமாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான விசேட நிகழ்ச்சித் தொடர்களை இம் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் தயாரித்து தமக்கு சமர்ப்பிக்குமாறும், அது எவ்வாறு நடைப்பெறுகின்றது என்பதை தமக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுற்றாடல் மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்காத வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்கள் மற்றும் செயலாளர்கள் மீது பெப்ரவரி 18 ஆம் திகதிக்கு பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் முக்கிய பொலிஸ் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”