மாடுகளுக்கு குறி சுடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!
பசுக்களுக்கு, காளைகளுக்கு நெருப்பிலிட்ட கம்பிகளினால் இனிவரும் காலங்களில் குறிசுடுவது இல்லை என பட்டிப்பொங்கல் திருநாளில் சபதம் எடுப்போமெனவும் அதனை மீறி செயல்பட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா நந்தகுமார் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது அன்புக்குரிய பசுக்களுக்கு, காளைகளுக்கு குறிசுடுதலால் ஏற்படும் சொல்லணா வேதனையை நாம் உணரவேண்டும். இனங்களிற்கு தொன்றுதொட்டு பொங்கலிட்டு தெய்வமாகப் போற்றிவரும் செய்நன்றி மறவாச் செந்தமிழராம் நாம் அறிந்தும் அறியாமலும் ஏதோ ஒரு விதத்தில் இக் கொடுமையான செயலை எமது தாயகத்தில் தொடர்ந்து வருவது வேதனைக்குரியது.
மரபு வழியாக பல விடயங்களில் தாய் தமிழக மக்களை பின்பற்றும் நாம் அவர்கள் என்றோ கைவிட்டுவிட்ட குறிசுடுதல் எனும் ஜீவகாருண்யமற்ற செயலை இன்று தொடக்கமாவது நாம் கைவிடுவதற்கு திடசங்கற்பம் பூணவேண்டும்.
எமது மேனியில் சிறு நெருப்புத்தணல் பட்டுவிட்டால் எமக்கு ஏற்படும் கொடூர வலியை எண்ணிப்பாருங்கள். இதே போன்றே நாம் பிள்ளைகள் போன்று நேசிக்கும் எமது பசுக்கள், காளைகள்,நாம்பன்களுக்கு நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் குறியிடும் போது அவை துடிதுடித்து துன்பப்படும் வேதனையை எம் கண்ணில் ஆழமாக எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்த நடைமுறைக்குப் பதிலாக வலியற்ற ரீதியில் காதில் இலக்கத்தகடு இடும் முறைமை எமது நாட்டில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அதுவே கால்நடைகளை பதிவதற்கும் அடையாளப்படுத்துவதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும்.
அதற்கு அருகிலுள்ள அவரவர் பிரதேசத்திற்கு பொறுப்பான கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையை தொடர்பு கொண்டு செய்யமுடியும்.
அதனை விடுத்து , பழுக்கக் காய்ச்சிய கம்பியால் குறிசுடுதல்,கொடூரமான முறையில்
மலடாக்கம் செய்தல் (நலமடித்தல்) என்பவை இலங்கை அரசின் மிருகவதைத் தடைச் சட்டத்தின் கீழ் பாரதூரமான தண்டணைக்குரிய குற்றமாகும் என்பதுடன் இந்த செயல்களை கைவிட மறுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இந்நிலையில் கடந்த மாதம் குறிசுட்டு பசுவை இரத்த காயத்திற்க்குள்ளாகிய நிலையில் ஒருவருக்கு எதிராக சைவ மகாசபையால் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவரை 50 ஆயிரம் ரூபாய் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமயளித்ததுடன் வழக்கு தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது என்றார்.
இந்த ஊடக சந்திப்பில் சைவ மகா சபையின் தலைவர் சண்முகரட்ணம், சட்டத்தரணி சிவஸ்கந்தஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”