பீற்றர் இளஞ்செழியனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…!!
கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பீற்றர் இளஞ்செழியனை தொடர்ந்தும் 18.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் நேற்று (04) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 31.12.2021 அன்று போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் நேற்று வரை அவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டிருந்தது.
இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பீற்றர் இளஞ்செழியன் சார்பில் மன்றில் ஆயரான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்திருந்தார்.
விசாரணைகள் நிறைவடையாத நிலையில் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் 18.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த வழக்கு விசாரணைகள் 18.01.2022 அன்று தவணையிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தனியார் பேருந்து வழித்தடம் ஒன்றை வழங்குவதற்காக மாவட்ட செயலக கடிதத் தலைப்பில் கடிதம் ஒன்று அடிக்கப்பட்டு அதனூடாக குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கு ஊடாக பணப் பரிமாற்றங்களும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த ஆவண தயாரிப்பு பணப் பரிமாற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுடனேயே பீற்றர் இளஞ்செழியன் உட்பட மற்றும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.