;
Athirady Tamil News

பதில் பணிப்பாளர் விவகாரத்தில் வைத்தியர் சத்தியமூர்த்தியின் நடவடிக்கைகளுக்கு கண்டனம்!!

0

யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் நடவடிக்கைகள் தொடர்பில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.போதனா வைத்தியசாலைக் கிளை பெருத்த அதிருப்தியையும் வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.போதனா வைத்தியசாலைக் கிளை (ஜன-04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கடமையை செவ்வனே செய்வதும் தான் இல்லாதபோதும் அந்த நிறுவனம் சேவை வழங்கலில் தடங்கல்கள் இன்றி அமைய வழி செய்வதும் அந்த நிறுவனத்தில் கொண்டுள்ள பற்று. தான் இல்லாதபோது சேவைகள் குழப்பமடைய வேண்டும் தன் பெயர் மட்டுமே அந்த நிறுவனத்தின் நிரந்தர முகவரியாகி விட வேண்டும் என ஓர் அரச சேவையாளன் எண்ணுவது அதீத பேராசையாகும்.

அந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி தற்போது தனது பட்டப்பின் படிப்பை வெளிநாட்டில் தொடர்ந்து வரும் Dr. சத்தியமூர்த்தி அவர்கள் ஊடகத்துக்கு அளித்த பதிலில் வைத்தியசாலைக்கு பணிப்பாளரை நியமிப்பது சுகாதார அமைச்சின் பணி என்று குறிப்பிட்டிருந்தார், வைத்தியசாலைக்கு பணிப்பாளரை நியமிப்பது சுகாதார அமைச்சின் பணி என்பதில் எமக்கு மாற்று கருத்து இல்லை. அப்படி எனில் கடந்த முறை அவர் வெளி நாடு செல்கையில் தனது பொறுப்புக்களை பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சிறீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்து விட்டு சென்றிருந்தாரே அப்படி இம்முறை செய்யவில்லையே அது ஏன் என்றுதான் நாம் கேள்வி எழுப்பி இருந்தோம். அப்படி எனில் தான் அல்லாத வேளையில் வைத்தியசாலை நிர்வாகம் நன்றாக நடந்து விடக்கூடாது என்ற எண்ணம் அவருக்கு உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மேலும் சுகாதார அமைச்சிலிருந்து பதில் நியமனம் ஒன்றை செயற்படுத்துவதற்கு எடுக்கும் ஓர் குறிப்பிட்ட கால இடைவெளி என்பது தவிர்க்கமுடியாதது. கடந்த முறை வைத்தியர். சத்தியமூர்த்தி அவர்கள் வெளிநாடு செல்லும்ப்பொது பதில் பணிப்பாளராக வைத்தியர். சிறீபவானந்தராஜாவை நியமித்திருந்தார் பதில் பணிப்பாளராக வைத்தியர். சிறீபவானந்தராஜாவும் தன் கடமைகளை மிக செவ்வனே முன்னெடுந்திருந்தார் ஆயினும் அதற்குரிய நியமனக்கடிதம் மத்திய அமைச்சிலிருந்து வர குறிப்பிட்ட காலம் எடுத்துருந்தது.

இந்த நடைமுறை வைத்தியர். சத்தியமூர்த்தி அவர்களுக்கு தெரிந்த போதிலும் அவர் இம்முறை தனது பொறுப்புக்களை வழங்கி சென்றிருக்கவில்ல்லை. இந்த முறை எமது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தலையிட்டு அழுத்தங்களை பிரயோகித்ததாலேயே ஓர் பதில் பணிப்பாளர் கடந்த 3.01.2022 அன்று சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆயினும் கடந்த 8 நாட்களாக பணிப்பாளர் வெற்றிடம் என்பது காணப்பட்டது வைத்தியசாலை நடவடிக்கைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன என்பதை நாம் ஊடகங்களுக்கு ஆதார ரீதியாக வெளிப்படுத்தியிருந்தோம். நாம் தலையிட்டிருக்காவிட்டால் வைத்தியசாலை சேவைகள் மிக மோசமாக தொடர்ந்திருக்கும். இந்த 8 நாட்களும் வடமாகாணத்தின் போதனா வைத்தியசாலையின் நிர்வாக வெற்றிடத்துக்கு வழிகோலியது வைத்தியர். சத்தியமூர்த்தி அவர்களது அசமந்த போக்கு என்பதா அல்லது அதிகார அதீத ஆசை என்பதா என்பது அவருக்கே வெளிச்சம்.

அடுத்து அவர் வெளிநாடு சென்ற நிலையில் நிர்வாக அலுவல்கள் தொடர்பாக தன்னை தொடர்புகொள்ளுமாறு கூறி வைத்திய நிபுணர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதை நாம் வெளிப்படுத்தி இருந்தோம். அவர் ஊடகத்துக்கு தான் பதவியாசை பிடித்தவர் அல்ல எனவும் தம்மீது பொய்ப்புகார் கூறுவதாகவும் தெரிவித்திருந்தாலும் அவர் அனுப்பிய மின்னஞ்சல் தொடர்பில் ஒரு கருத்தும் கூறவில்லை அது தொடர்பில் விளக்கம் அளிக்கவும் தவறியுள்ளமை எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனும் வைத்தியர். சத்தியமூர்த்தியின் நிலைப்பாட்டையே காட்டுகிறது.

மேலும் வட பிராந்தியம் முழுவதற்கும் அவசர சிகிச்சை சேவையை வழங்கி வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவைப்பிரிவின் விஸ்தீரணத்தின் முழு அவசியத்தை அப்பிரிவு வைத்தியர்களும் அரச மருத்துவ சங்கத்தினராகிய நாமும் பல தடவைகள் வைத்தியர். சத்தியமூர்த்தி பணிப்பாளராக கடமையிலிருந்த போது வலியுறுத்திக் கூறியும் அது தொடர்பில் வெற்று உறுதிமொழிகளை வழங்கி காலம் தாழ்த்தியும் போதியளவு வைத்தியர்களை நியமிக்க கோரி நாம் ஆலோசனை கூறியபோதெல்லாம் இன்று நாளை என வாக்குறுதிகளை மட்டுமே வழங்கிவிட்டு அவ்வாக்குறுதிகளை தான் ஏறிச் சென்ற விமானத்திலிருந்து பறக்க விட்டுள்ளார். தற்போது விபத்து அவசர சிகிச்சை பிரிவு கடும் ஆளணிப்பற்றாக்குறையினால் அல்லல் உறுகிறது.

மக்களுக்கான சுகாதார சேவையிலும் இடையறாத தடங்கல் இன்றிய அரச சேவையில் மிகுந்த அக்கறையும் பொறுப்பும் கொண்டவர்களாகிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கதினராகிய நாம் வைத்தியர். சத்தியமூர்த்தி தனது பொறுப்பை உரிய பதில் பணிப்பாளரிடம் கொடுத்து செல்லாத நிலையிலே வைத்தியசாலை நிர்வாகம் குழப்பமுற்றமை, ஸ்தாபன விதிக் கோவை விதிகள், மருத்துவப்பட்டப்பின் படிப்பு கல்லூரியின் விதிகளை மீறி வெளி நாட்டிலிருந்து மின்னஞ்சல் பணிப்பாளராக பதவிலிருக்க விழைந்தமை, இது தொடர்பாக ஊடகங்களுக்கு முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தொடர்ந்து வழங்குவது ஆகியன தொடர்பில் பெருத்த அதிருப்தியையும் வன்மையான கண்டனங்களையும் தெரிவிக்கின்றோம் என்று அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.