காணாமல் போகும் குழந்தைகள்.. காரணங்களும்.. கற்பனைகளும்!! (மருத்துவம்)
ஒரு குழந்தையின் முகம் வருந்திச் சிவப்பதை காண சகிக்காத மனதுதான் மனிதம். போற்றிப் பாதுகாக்க வேண்டிய குழந்தைமை என்னென்ன வகைகளில் சீரழிகிறது என அறிந்தால், தாங்கிக்கொள்ளவே முடியாது. அதிலும் குழந்தைகள் வன்கொடுமையில் உடல் ரீதியான கொடுமையே அதிகமானது. காலையில் பள்ளி வாகனத்தில் சென்ற குழந்தை மாலையில் திரும்பவில்லை என்றால்? கண் எதிரே விளையாடிய குழந்தை கடையில் காசு கொடுத்து திரும்பிப் பார்க்கையில் காணோம் என்றால்? பஸ்ஸில் / ரயிலில் புடவை முந்தானையை பிடித்து பின்னால் வந்த குழந்தையை காணவில்லை என்றால்?
ஆம்… ஒவ்வொரு 8 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை காணாமல் போகிறது. தலைநகர் டெல்லியில் சுமார் 18 குழந்தைகள் தினமும் காணாமல் போகின்றன. 2013ம் ஆண்டு கணக்கெடுப்பில், இந்தியாவில் ஒன்றரை லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக பதிவாகியிருக்கிறது.
பதிவாகாமல் போனவை எத்தனையோ?
இதே போல் தொலைந்த குழந்தைகள் கணக்கெடுப்பு நம் பக்கத்து நாடான பாகிஸ்தானில் 3 ஆயிரம், மக்கள்தொகை அதிகமான சீனாவில் 10 ஆயிரம் என குறைவாகவே உள்ளது. நம் நாட்டில் மட்டும் ஏன் இந்த அதீத நிலை? ஒவ்வொரு ஆண்டும் காணாமல் போகிறவர்களில் 55 சதவிகிதத்தினர் பெண் குழந்தைகளே. அதில் கண்டுபிடிக்க முடியாத சதவிகிதமோ 60க்கும் அதிகம். மகாராஷ்டிரா, ஆந்திரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் இவ்விஷயத்தில் முன்னணியில் உள்ளன.
இந்த 3 மாநிலங்களிலும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட 2 மடங்கு அதிகமாக மாயமாகின்றன. தமிழகமும் இந்த வரிசையில் இருக்கிறது. செய்தித்தாளில் படிக்கும்போது, இது சட்டென கடக்கிற ஒரு புள்ளிவிவரமாகவே இருக்கிறது. காணாமல் போன குழந்தையின் பெற்றோர் நிலையில் நாம் ஒருபோதும் யோசிக்கவே முடியாது. கடத்தப்படும் குழந்தைகள் ஒட்டகம் மேய்க்கவோ, உறுப்புகளுக்காகவோ, நொய்டாவில் நடந்தது போல நரபலிக்காகவோ, பாலியல் தொழிலுக்கோ… எதற்காக வேண்டுமானாலும் உருக்குலைக்கப்படலாம்.
குழந்தைகள் காணாமல் போவதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. மற்றவர்களால் கடத்தப்படலாம். அவர்களாகவே ஓடிப்போகலாம். எப்படி இருப்பினும், திரும்பி வராத குழந்தைகளின் நிலை என்பது மிகவும் பரிதாபத்துக்கு உரியது. குழந்தைத் தொழிலாளியாக, பிச்சை எடுப்பவராக, பாலியல் தொழிலாளியாக, சட்ட விரோத தத்தெடுப்புக்கு உட்படுத்தப்படுபவராக, உடல் உறுப்பை இழப்பவராக, போதை மருந்து விற்பவராக, சமுதாய குற்றவாளியாக, ராணுவ எடுபிடியாக, தேசமற்ற அகதியாக, பயங்கரவாதியாக… இன்னும் எத்தனையோ வழிகளில் அவர்கள் வாழ்வு மாறிப்போகிறது.
கடத்தப்பட்டு காணாமல் போகும் குழந்தைகளில் 12-18 வயது வரை 72 சதவிகிதம் பேரும், 5-12 வரை 30 சதவிகிதம் பேரும் இருக்கிறார்கள். காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய கற்பனைகளும் உண்மைகளும் வேறானவை.
அறிமுகம் அற்றவர்களால் மட்டுமே கடத்தப்படுகின்றனர்?
இல்லவே இல்லை… சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் இரு குழந்தை கள், தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் டிரைவரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அறிமுகமானவர்களும் முன்பகை, பணம், பொறாமை போன்ற காரணங்களுக்காக குழந்தைகளை பலி ஆக்குகிறார்கள்.
காணாமல் போவதில்லை… கடத்தப்படவே செய்கிறார்கள்?
இல்லை… தொலைந்தும் போகிறார்கள். வழி தவறுதல், பெற்றோரை / உடன் வந்தவர்களை தவற விடுதல், சுற்றுலா இடங்களில் தொலைதல் போன்றவையும் நிகழ்கின்றன. உதாரணமாக… அலகாபாத் கும்பமேளாவில் ஒரே நாளில் 38 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வழிதவறினார்கள். அதில் பாதிக்கும் மேல் குழந்தைகளே. திரும்ப வரும் குழந்தைகள் குடும்பத்தினருடன் இணைய விரும்புகிறார்கள்?
துரதிர்ஷ்டவசமாக இல்லை. குறிப்பிட்ட சதவிகித குழந்தைகள் வீட்டில் இருந்து சொல்லாமல் சென்றவர்களே. குடும்பச் சூழல் பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறுபவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைய விரும்புவதில்லை அதேபோல, பெரும்பாலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தை களும் திரும்ப குடும்பத்துடன் வாழ விரும்புவதில்லை. சட்டத்துக்குப் புறம்பான வேலைகளுக்கு மட்டுமே உபயோகப்படுகிறார்கள்? இதுவும் தவறான கணிப்பே. ஹோட்டல், தொழிற்சாலைகள், சுரங்கங்கள் என்று பல்வேறு வேலைகளிலும் இக்குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
வறுமை காரணமாகவே காணாமல் போகிறார்கள்?
இல்லை… வசதியான பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளும் காணாமல் போகிறார்கள்… கடத்தப்படுகிறார்கள். வறுமை வாழ்வு என்பது பெரும்பான்மை காரணங்களில் ஒன்று மட்டுமே. Human Trafficking / Human Smuggling? இவை இரண்டுக்கும் பொதுவான அர்த்தம் இருந்தாலும், வேறுபாடு உண்டு. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அவர்கள் அறியாமலே கொண்டு செல்லப்படுவது டிராஃபிக்கிங். தான் கடத்தப்படுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியாது. உதாரணமாக… தொலைந்து போகும் குழந்தைகளை ஆதரவாக பேசியபடியே வேறொரு இடத்துக்கு அழைத்துச் செல்வது. அவர்களுக்கு தெரிந்தே இடம் மாற்றுவதே ஸ்மக்ளிங்.
தான் கடத்தப்படுகிறோம் என்பது அவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்.பெண் குழந்தைகளே அதிகம்?இல்லை… ஆண் குழந்தைகளும் கிட்டதட்ட சம அளவில் காணாமல் போகிறார்கள். சுரங்கம் உள்ளிட்ட கடினமான வேலைகளுக்கும் உடல் உறுப்புகளுக்கும் போதை மருந்து விற்பதற்கும் ஆண்குழந்தைகள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். பெண் குழந்தைகள் பெரும்பாலும் பாலியல் தொழிலுக்கே பலியாகின்றனர்.