அக்கிராசன உரை;கடிதம் எழுதினார் ரணில் !!
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நாளன்று, ஜனாதிபதி ஆற்றும் அக்கிராசன உரை தொடர்பில், சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்று நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்க கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அக்கடித்தின் பிரதிகள், சபைமுதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர், எதிர்வரும் 18ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், பாராளுமன்றம் ஜனவரி 11 ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
எனினும், ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி, டிசெம்பர் மாதம் 13ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, சபை நடவடிக்கைகளை ஜனவரி 18ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைத்தார்.
ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில், ஜனவரி 19,20 ஆம் திகதிகளில் முடிந்தால் 21ஆம் திகதியும், சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தை நடத்த முடியுமென அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.