கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்காத ஆப்பிரிக்க நாடு…!!
உலகின் மற்ற பகுதிகளை விட ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிகவும் மந்தமாகவே நடக்கிறது. ஆப்பிரிக்காவில் 2021ம் ஆண்டு இறுதிக்குள் 40 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும் என உலக சுகாதார அமைப்பு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இதற்காக 90 கோடி தடுப்பூசிகள் தேவை என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் 47 கோடியே 40 லட்சம் தடுப்பூசிகள்தான் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. எனவே டிசம்பரில் நிர்ணயிக்கப்பட்ட தடுப்பூசி இலக்கை எட்டப்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
54 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க கண்டத்தில், சிசெல்ஸ், மொரிசியஸ், மொராக்கோ, துனிசியா, கேப் வெர்டே, போத்ஸ்வானா, ருவாண்டா ஆகிய 7 நாடுகள் மட்டுமே 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி உள்ளன. சிசெல்ஸ் நாட்டில் அதிகபட்சமாக 79.50 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். பாதி நாடுகள் ஏறத்தாழ 10 சதவீத மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளன.
ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய நாடுகள் உள்பட பல நாடுகளில் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எரித்ரியாவில் இன்னும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவில்லை.
உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக தொடங்கப்பட்ட கோவாக்ஸ் திட்டம் மூலம் தடுப்பூசிகளை பெறலாம் என ஆப்பிரிக்க நாடுகள் பெரிதும் நம்பியிருந்தன. இந்த திட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகள் பெரும்பாலும் இந்தியாவில் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2021 மத்தியில் இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுத்த நிலையில் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது. பணக்கார நாடுகளிடம் இருந்தும் உதவிகள் வராத நிலையில், ஆப்பிரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் பின்னடைவை சந்தித்தது.
கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிக தடுப்பூசிகள் கிடைத்தாலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆப்பிரிக்க நாடுகள் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இலக்கை எட்ட முடியாமல் திணறுகின்றன.