திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக FR மனு தாக்கல்!!
நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்ட திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தந்தை ரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் நேற்றைய தினம் (06) கைச்சாத்திடப்பட்டிருந்தது.
நேற்று (06) மாலை குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு குறிப்பிட்டிருந்தார்.
குறித்த ஒப்பந்தத்தில் காணி ஆணையாளர் நாயகம், திறைசேரியின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி மற்றும் Trinco Petroleum Terminal தனியார் நிறுவனம் ஆகியன கைச்சாத்திட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கமைய, 99 எண்ணெய் தாங்கிகளில் 85 எண்ணெய் தாங்கிகள் இலங்கைக்கும் ஏனைய 14 எண்ணெய் தாங்கிகள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.