ஒரிசாவை தொடர்ந்து ஆந்திராவிலும் சீன எழுத்து டேக் கட்டப்பட்ட புறா- போலீசார் விசாரணை…!!
ஒடிசா மாநிலம் சுந்தர்கர் அருகேயுள்ள கோன்ஸ்பஹால் என்ற இடத்தில் புறா ஒன்று காயத்துடன் தரையில் விழுந்து இருந்தது.
அந்த வழியாக சென்ற சர்பேஸ்வரன் என்பவர் சிகிச்சைக்காக புறாவை மீட்டார். அப்போது புறாவின் காலில் சீன எழுத்துக்களுடன் டேக் கட்டப்பட்டு இருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சர்பேஸ்வரன் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்து புறாவை மீட்ட போலீசார் புறா எங்கிருந்து அனுப்பப்பட்டது. புறாவை அனுப்பியது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சீமகுர்த்தியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் டேக் கட்டப்பட்ட புறா ஒன்று நின்றது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் அந்த புறாவை பிடித்தார்.
காலில் கட்டப்பட்டிருந்த டேக்கில் சீன எழுத்தும் மேலும் Air 20192207 என எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு நாகராஜ் தகவல் தெரிவித்தார். போலீசார் புறாவை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.