வாலிபர்களுக்கு ஆபாச வீடியோ கால் செய்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் – உஷாராக இருக்க போலீஸ் எச்சரிக்கை…!!
குமரி மாவட்டத்தில் ஆன்லைன் வேலைவாய்ப்பு உள்பட பலமோசடிகள் தொடர்ந்து நடப்பதாக குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன. இதனால் சைபர் மோசடியில் சிக்காமல் இருக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில், பகுதி நேர வேலை, ஏ.டி.எம். கார்டு புதுப்பிப்பு, வாட்ஸ் ஆப்சில் ஆபாச வீடியோ கால் பதிவு செய்து ஏமாற்றி வருகின்றனர். இந்த சம்பவங்களால் பணத்தை இழந்தவர்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக குமரி மாவட்டம் மேக்கா மண்டபத்தை சேர்ந்த ஒருவரின் செல்போனில் பகுதி நேர வேலை என்று ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அவரும் குறுஞ்செய்தியில் வந்த நம்பரை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது வின்செஸ்ட் ஆப்பில் ரீசார்ஜ் செய்தால், பிராபிட் கிடைக்கும் என்று கூறிய உடன் அவரும் பல தவணைகளாக ரூ.4 லட்சத்து 83 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். பின்னர் அந்த முதலீட்டு நிறுவனத்திலிருந்து எந்த தகவலும் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்து, புகார் கொடுத்துள்ளார்.
இதுபோல் கோட்டார் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் செல்போனுக்கு கால் செய்த நபர் தான் எஸ்.பி.ஐ. வங்கியில் மேலாளராக இருப்பதாகவும், ஏ.டி.எம். கார்டு புதுப்பிப்பு செய்து தருவதாகக்கூறி அவரின் கூகுள்பேக்கு ஒர் பார்கோர்டு ஸ்கேனர் அனுப்பி உள்ளார். அதை அவர் ஸ்கேன் செய்யுமாறு கூறி உள்ளார். அவரும் அதை நம்பி ஸ்கேன் செய்தவுடன் அவரின் எஸ்.பி.ஐ. வங்கிக்கணக்கில் இருந்து ரூ.9445 எடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்தவரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு வீடியோ கால் வந்துள்ளது. அதை அவர் ஆன் செய்தவுடன் அதில் ஒரு பெண் ஆபாசமாக இருந்ததாகவும், அதன் பிறகு அவரின் புகைப்படத்தை அந்த பெண்ணின் புகைப்படத்துடன் ஆபாசமாக சித்தரித்து, முகம் தெரியாத நபர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி உள்ளார். மேலும் பணம் கொடுக்காவிட்டால் அந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
அந்த முகம் தெரியாத நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த வாலிபர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். இதுபோல் தொடர்ந்து பல புகார்கள் வருகின்றன. இதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் சைபர் மோசடியில் சிக்காமல் இருக்க மக்கள் மத்தியில் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.