நெல்சன் மண்டேலா இருந்த சிறையின் சாவி ஏலம் விடுவது நிறுத்தி வைப்பு…!!
தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபர் நெல்சன் மண்டேலா, அந்நாட்டில் நிலவிய நிறவெறிக்கு எதிராக போராடிய தலைவர். இதற்காக அப்போதைய ஆங்கேலேய அரசு அவரை 27 ஆண்டுகள் சிறையில் அடைத்தது. இதில் 18 ஆண்டுகள் அவர் ரோபன் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தற்போது அந்த சிறைச்சாலையின் சாவி ஜனவரி 28ம் தேதி ஏலம் விடப்படும் என்று அமெரிக்க ஏல நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த ஏலத்தை நிறுத்துமாறு தென் ஆப்பிரிக்க அரசு சார்பில் அமெரிக்க ஏல நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டது. தங்கள் நாட்டு தலைவர் நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறைச் சாலையின் சாவி அனுமதிக்கப்படாமல் தென்னாப்பிரிக்காவை விட்டுச் சென்றது எப்படி என கேள்வி எழுந்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை ஏலம் நிறுத்தப்படுவதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெல்சன் மண்டேலா
இந்த நடவடிக்கைக்கு தென்ஆப்பிரிக்காவின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் நத்தி மத்தேத்வா பாராட்டு தெரிவித்துள்ளார். சிறைச்சாலை சாவி, தென்னாப்பிரிக்காவின் வலிமிகுந்த வரலாற்றைக் குறிக்கிறது. அந்த சாவி தென் ஆப்பிரிக்கர்களின் சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டம் குறித்த தற்போதைய ஆதாரம். அது தென்ஆப்பிரிக்கா மக்களுக்கு சொந்தமானது. எனவே இது உரிமையுடன் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து விடுதலையான மண்டேலா 1994ம் ஆண்டு மே மாதம் ஜனநாயக தென்ஆப்பிரிக்காவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 199ம் ஆண்டுவரை அவர் அந்த பதவியை வகித்து வந்தார். 2013ம் ஆண்டு தனது 95 வது வயதில் நெல்சன் மண்டேலா காலமானார்.