ஆனந்த தேரருக்கு பிரதமர் தலைமையில் கௌரவிப்பு!!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்ட நாராஹேன்பிட ஸ்ரீ அபயாராம புராதன விகாராதிபதி வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு கௌரவமளிக்கும் விழா (“அனத நாஹிமி குலபதி உபஹார”) இன்று (08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பொதுச் சேவை ஐக்கிய தாதியர் சங்கம் இந்த விழாவினை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது நாராஹேன்பிட ஸ்ரீ அபயாராம புராதன விகாராதிபதி வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கௌரவிக்கப்பட்டார்.
குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இலங்கை வரலாற்றின் பல்வேறு சந்தர்ப்பங்களில் தேசிய பிரச்சினைகள் மற்றும் அனர்த்தங்களின் மத்தியில் மஹாசங்கத்தினர் முன்னின்று செயற்பட்டமைக்கு வரலாறு சாட்சியளிக்கும். இந்நாட்டின் தேசிய பிரச்சினைகளின் போது முன்னின்று பெருந்தன்மையாக உழைத்த ஒருவராக நமது தேரர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். அந்த தேசிய பிரச்சினைகளின் மத்தியில் அவர் தயக்கமின்றி செயற்பட்டார். அதேபோன்று தொழில் உரிமைக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டார். அது இறுதியில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் தொழிற்சங்க நடவடிக்கையாக மாற்றுவதற்கும், நேரடி கருத்துக்கள் ஊடாக போராடி வெற்றியுடன் நிறைவுசெய்வது தொடர்பில் நம் ஒவ்வொருவருக்கும் பெருமையடைய வேண்டும். விசேடமாக தாதியர் சேவையின் முன்னேற்றம் உள்ளிட்ட இந்நாட்டின் சுகாதார துறைக்கு அவரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மிகவும் முக்கியமானதுடன், அது சாதகமான சுகாதார சேவைக்கு முக்கியமானதாக விளங்குகின்றது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதன்போது குறிப்பிட்டார்.
சிலுமின பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தர்மன் விக்ரமரத்ன இதன்போது வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் வாழ்க்கை தத்துவம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
கொழும்பு பல்கலைக்கழக வேந்தர், நாராஹேன்பிட ஸ்ரீ அபயாராம புராதன விகாராதிபதி மற்றும் பொதுச் சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவருமான வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதன்போது உரையாற்றினார்.
´பல நிகழ்வுகளை இரத்து செய்தே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகைத்தந்துள்ளார். அன்று அபயாராம மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட போது பிரதமர் விகாரைக்கு வருகைத்தந்து எம்மை பற்றி விசாரித்தமையை ஒருபோதும் மறக்க முடியாது. நீங்கள் இன்று செய்துள்ள கௌரவிப்பிற்கும் எமது சங்கம் நன்றி தெரிவிக்க விரும்புகிறது என வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.