கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் புதிய தொடருந்து!! (வீடியோ)
கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் புதிய தொடருந்து இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5.10 மணியளவில் கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த தொடருந்து நண்பகல் 12.15 மணிக்கு யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு பயணத்தைத் தொடர்ந்தது.
காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு சேவையை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலையத்திலிருந்து 37 மணிக்கு சேவையை ஆரம்பித்து கொழும்பை இரவு 8 மணிக்கு சென்றடையும்.
இதுவரை காலமும் 5 குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் சேவையில் ஈடுபட்ட இந்த நகர்சேர் கடுகதி சேவை இன்று முதல் மேலதிகமாக 3 பெட்டிகளை இணைத்து 8 பெட்டிகளுடன் சேவையில் ஈடுபடவுள்ளது. இதன்மூலம் பயணிகளின் எண்ணிக்கை 360ஆக அதிகரிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலாவது சேவையில் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட பிரதேச போக்குவரத்து அதிகாரியை யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் வரவேற்றார்.
இந்தியாவின் 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) நிறுவனமானது இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு குளிரூட்டப்பட்ட வசதிகளுடனான டீசல் ரயில்கள்(DMU) இரண்டை இலங்கைக்கு வழங்கியது.
அவற்றில் ஒன்று வடக்குக்கான சேவையில் இன்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த கடனுதவி திட்டத்தின் கீழ் மாஹோ முதல் ஓமந்தை வரையிலான 128 கிலோ மீற்றர் ரயில் பாதை சீரமைப்பு, மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான சமிக்கை வலையமைப்பு திட்டம், பொல்காவலை முதல் குருநாகல் வரையிலான இரட்டை ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”