இனவாத அரசியல் செயற்பாடு இலங்கைக்குப் பொருத்தமற்றது – சஜித் பிரேமதாச!!
இனவாத அரசியல் செயற்பாடு இலங்கைக்குப் பொருத்தமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நான் ஒரு சிறந்த சிங்கள பௌத்தன். பௌத்தத்தின் போதனைகளை உண்மையான வழிகளில் கடைப்பிடித்து வருகின்றேன். நான் பௌத்ததின் போதனைகளை தவறாக வெளிப்படுத்தவில்லை.
இதன் ஊடாக அரசியல் இலாபத்தை பெறுவதற்கு முயற்சிக்கவில்லை. ராஜபக்ச அரசாங்கம் பௌத்தத்தின் உண்மையான போதனைகள் மற்றும் வழிகாட்டல்களை கடைபிடிக்கின்றது என்று கூறமுடியாது.
அவர்கள் இனவாத சிந்தனையை நாடுபூராகவும் விதைத்து அதன் ஊடாக அரசியல் செய்துவருகின்றனர். மத வாத கருத்துக்களினால் ஆட்சி நடத்துகிறார்கள். ஆகவே இத்தகைய பேதங்கள் எமது நாட்டிற்குப் பொருத்தமற்றது.
ஒரு ஜனாதிபதி ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை விளங்கிக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட இனம், அல்லது தனிப்பட்ட ஒரு குழுவினரின் வாக்குகளை மட்டும் இலக்கு வைத்து அரசியல் செய்வது கீழ்த்தரமான சிந்தனையாகும்.
இது ஒரு சிறந்த ஆட்சிமுறையல்ல. நான் இனவாத கருத்துக்களை பரப்புபவன் அல்ல. நான் மக்களிடத்தே பாரபட்சம் பார்ப்பதில்லை. இதனால் தான் நாட்டை ஆள்வதற்கு விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”