பிரேசில் ஏரியில் படகுகள் மீது பாறை விழுந்து விபத்து – 7 பேர் உயிரிழப்பு…|!!
பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கேபிடோலியோ பகுதியில் அமைந்துள்ள ஃபர்னாஸ் நிர்வீழ்ச்சி பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
மோட்டார் படகுகள் மூலம் அருவி பகுதிக்கு அவர்கள் சென்ற நிலையில், அங்குள்ள உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறை ஒன்று உடைந்து மூன்று படகுகள் மீது விழுந்தது. இதில் 7 பேர் உயிரிழந்துனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 20 பேரை காணவில்லை என்று மினாஸ் ஜெரைஸ் தீயணைப்புத்துறை அதிகாரி கர்னல் எட்கார்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அங்குள்ள பாறை சுவர்கள், குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்த நிலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்த வீடியோக்காட்சிகள் சமுக வளைதளங்களில் பகிரப்பட்டன. அந்த வீடியோவில் பலர் கற்கள் விழுகின்றன என்று எச்சரிக்கை விடுப்பதும் மற்ற படகுகளில் இருந்தவர்களை விலகிச் செல்லுமாறு குரல் கொடுப்பதும் பதிவாகி உள்ளது.
தீயணைப்பு வீரர்கள் உள்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இரவில் தேடல் தடைப்பட்டு காலையில் மீண்டும் தொடங்கியது.
சுற்றுலா முகவர் மற்றும் உறவினர்கள் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்றது. தென்கிழக்கு பிரேசிலில் கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான மழை பெய்து வருகிறது, இதனால் பாறை சரிவுகள் அதிகமாக உள்ளதாக தீயணைப்புத்துறை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.